Friday 4 October 2013

சென்னை-வாசி

ஆசையாய் வளர்த்த
வெள்ளை ரோஜா செடியை
வேலி தாண்டி வந்து வேட்டையாடும்
வெள்ளாடு மந்தையின்
சேட்டைகள் இல்லை இங்கே

கொண்டைச் சேவல் துரத்தி
கோகிலா வீட்டிற்கு சென்ற கோழி
கொழம்பில் கொதிக்கும்
அநியாயத்தை அனுபவிப்பதில்லை இங்கே

பெயருக்குபின் பரம்பரைத்
தொழிலால் வந்த‌ பிரிவினையின்
பெயரை சேர்த்துக்கொள்வதில்லை இங்கே

வள்ளியம்மையுடன் போட்டியிட்டு
விடியுமுன் விழித்து
வாசலை அடைக்கும் விதமாக‌
வண்ணப்பொடியுடன் கோலமிட தேவையில்லை இங்கே

விளக்கு வைக்கும் நேரம் வந்ததும்
வீட்டு வாசல் தாண்டக்கூடாது என்ற
விதியில்லை இங்கே

கண்ணைப் பார்த்து நண்பனுடன்
கதையடித்தால் காதல் தான் என‌
கட்டுக்கதை பேசுவாரில்லை இங்கே

சமஞ்ச புள்ளைக்கு என்னடி
சத்தம் போட்டு சிரிப்பு?
சடை பின்னி பொட்டு வெச்சு
சமையல் கத்துக்கோடி...
என்று சத்தம்போடும்
அப்பத்தாவின் அதிகாரமில்லை இங்கே

பாஞ்சாலியும் பரஞ்சோதியும்
கிழக்கே போகும் ரயிலில் ஓடிப்போனாலும்
கார்வெச்சுருந்த சொப்பண சுந்தரியை
யார் வெச்சுருந்தாலும்
யாருக்கும் தெரியபோவதில்லை இங்கே ..

No comments:

Post a Comment