துணையாய் வந்த தனிமை






1


"பெருசா ஒண்ணும் பிரச்சனையில்லை".. டாக்டர் வேதரத்தினம் சொல்லிக்கொண்டே தனது மூக்கு கண்ணாடியை கழற்றி மேசைமீது வைத்தார்.பழனியம்மாளுக்கு மனதைரியம் சிறிதும் குறையாமல் டாக்டரிடமிருந்த்து இந்த வார்த்தையை தான் எதிர்பார்த்ததுபோல நோயாளியின் இருக்கையில் அமர்ந்த்திருந்தாள்.

சற்றே பதற்றம் குறைந்த நிலையில் அவளது மகன் வெங்கடேசன் மற்றும் இளைய மகள் கல்பனா ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மன மகிழ்ச்சியை பார்வையின் மூலம் வெளிப்படுதிக்கொண்டனர்.அடுத்ததாக டாக்டர் கூறிய செய்தி அந்த மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யவில்லை.



"அதாவது இந்த அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இனி அவங்க ஒரு குழந்தை மாதிரி.. அவங்க நினைவுகளெல்லாம் ஒவ்வொரு வருஷமா குறைஞ்சுகிட்டே போகும்.. ஞாபக மறதி அதிகமாகும்.இன்னும் கொஞ்ச காலத்துல இவங்க பிஹேவியர் அப்படியே ஒரு குழந்தையை போல மாறிடும்.சாப்பிட்றது முதல் கொண்டு எல்லாம் மறந்துடும்." டேபிளில் இருந்த பேப்பர்வெயிட்டை சுழற்றியபடியே டாக்டர் கூறினார்.



டாக்டர் சாப்பாட்டைப் பற்றிக் கூறியதும்தான் சாப்பிட்ட பிறகு போடவேண்டிய சுகர் மாத்திரையை வெங்கட் மறந்தது நினைவுக்கு வந்தது. ஞாபக மறதியைப்பற்றிக் கூறும்போது கல்பனாவிற்கு தன் கணவர் அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து செல்ல மறந்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்க ஆரம்ப்பித்தாள். தனக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் அவர்களைப் பற்றிய எண்ணம் தான் எப்போதும்.



ஆனால் பழனியம்மாளுக்கோ இந்த சிந்தனைகளெல்லாமில்லை. அவள் மனதில் உறுத்திக்கொண்டிருந்த்த கேள்வியை வாயை திறந்து கேட்டேவிட்டாள். "டாக்டரய்யா.. உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?.." வெங்கட் மற்றும் கல்பனாவுக்கோ தர்மசங்கடம் தான்.. அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே வழிந்தனர். கல்பனா பழனியம்மாளின் கையை நாசூக்காக கிள்ளிவைத்த போது "ஏய்.. ஏண்டீ.. கையை கிள்ளுற? டாக்டர்.. உங்க வீடு எங்க இருக்கு..?" என மேலும் தன் மகன் மற்றும் மகளுக்கு தர்ம சங்கடத்தைக் குடுத்தாள் அந்த 80 வயதுக் கிழவி..



"ஹா ஹாஹ் ஹா.. என் வீடு காந்தி சிலை பக்கத்துல இருக்குதுமா.."

"என் வீடும் அங்க தான்யா இருக்கு.. ஆமா.. நீங்க என்ன ஜாதி..?" சுருக்கென ஆனது டாக்டருக்கு.. "அவரு என்னவா இருந்த உனகென்ன? வாய மூடு மா.." என்றார் வெங்கட் கோபமாக.

"எங்க அம்மா எப்பவுமே இப்படிதான் டாக்டர்.. எங்க வீட்டுல எல்லாருக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இந்த பழக்கம் இல்லாம இருந்துது.. இப்போ கொஞ்ச நாளா பாக்குறவங்க கிட்டலாம் இப்படி கேக்க ஆரம்பிச்சுட்டா..." என்று சமாளித்தாள் கல்பனா.
வெங்கட் சோர்ந்து தான் போய்விட்டார். இருக்காதா? தன் மகள் பவித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்ற பெயரில் கல்யாண வீட்டில் யாரிடமோ ஜாதகம் வாங்கி வந்து "டேய்.. போய் பேசிப்பாருடா பையன் வீட்டில்" என நச்சரிப்பதும் ,பார்க்கிறவர்களிடமெல்லாம் உங்கள எங்கயோ பாத்திருக்கிறேன் எனக் கேட்பதுமாக...

அப்பப்பா...

"இவங்க ஞாபகம் இனி இப்படி தான்.. ஒவ்வொரு வருஷமா குறைஞ்சு கடைசியில ஒரு வயசு குழந்தைக்கு இருக்குற பழக்கம் இவங்களுக்கு இருக்கும்.. நான்சொல்றது உங்களுக்கு புரியும்னு நெனைக்குறேன்?. நீங்க தான் பத்ரமா பாத்துக்கணும்." தலையாட்டி சொல்லிக்கொண்டே விடை கொடுத்தார்.அடுத்த நோயாளியை அழைத்து வந்து பழனியம்மாள் இருந்த இருக்கையில் உட்கார வைத்த போது பழனியம்மாள் கையை பிடித்து அழைத்துச் சென்றாள் கல்பனா.



" யேய்.. கல்பனா.. உன் வீட்டுக்காரர் எப்போ வர்றதா சொன்னாரு?.. வண்டியில தான வருவாரு?. "

"ஆமாணே.. நீ அம்மாவ கூட்டிட்டு கிளம்பு.. அவங்க அந்தா ஒருத்தர்ட்ட பேசிட்டு இருக்காரு பாரு.." என கல்பனா பழுப்பு நிற சட்டை அணிந்திருந்த அவள் கணவனை தன் அண்ணன் வெங்கட்டிடம் காட்டினாள். தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த கணவர் கண்ணசைவில் "வெயிட் பண்ணு" என்பது போல முகத்தை உயர்த்திக்காத்தினார் கல்பனாவிடம்..



"அந்த கம்பிய நல்லா பிடிச்சுக்கோ...விழுந்துராத கீழ.." அம்மாவுக்கு எச்சரிக்கை காட்டியவாறே வெங்கட் அம்மாவை அழைத்து கொண்டு வண்டியை கிளப்பினார்.

" என்னை அந்த தெரு முக்குல விட்டுடு.. நான் என் வீட்டுக்கு நடந்து போய்டுவேன்." பழனியம்மாள் கூறியதை காதில் வாங்காமல் சுகர் மாத்திரையை எண்ணிக் கொண்டே சென்றார்.



கணவர் வருவதற்குள் தனது மொபைலில் டயல்டு நம்பரிலிருந்த மலர்விழிக்கு கால் செய்தாள் கல்பனா..

"என்ன கல்பனா? சொல்லு..."

"அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தேன்.. நானும் அண்ணனும்."

"அப்படியா? ஒரே இரைச்சலா இருக்கு டி.."

"ச்சேரி ச்செரி.. நான் அப்போ வீட்டுக்கு போயிட்டு போன் பண்றேன்.." அவள் போனை கட் செய்வதற்கும் கணவர் வண்டியை திருப்பி கொண்டு வந்து கல்பனா முன் நிற்பதற்கும் சரியாக இருந்தது..



வீட்டிற்கு வந்து பள்ளிக்கு சென்றிருந்த இளைய மகன் சாப்பிட்ட தட்டை கழுவிக்கொண்டிருந்த போது மலர்விழியிடமிருந்து அழைப்பு வந்தது.. "டாக்டர் என்ன சொன்னாங்க கல்பனா.?." நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டிருந்தாள் அக்காவிடம்..


வாசல் கதவை திறந்து உள்ளே வந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பழனியம்மாள் "நச்" என தும்மினாள். "யாரது திட்டுறது?" மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பழனியம்மாளுக்கு மூட நம்பிக்கையை விட தன்னம்பிக்கையே அதிகம். அதென்னவோ அவளுக்கு யார் உதவியுமின்றி தனித்து வாழவேண்டுமென்ற வைராக்கியம்.

முதுமையில் தனிமையை அவள் விரும்பினாள்.அவள் சொந்தகாலில் வாழ முயன்றதை அந்த தனிமை நிரூபித்தது.தனது மூன்று மகன்களுக்கும் மூன்று மகள்களுக்கும் அவளால் இயன்ற உதவியை செய்து வந்தாள்.

மூத்த மகன் சரவணன் பக்கத்து ஊரிலும், இரண்டாவது மகன் வெங்கடேசன் அதே தெருவில் வசித்தாலும் கூட அவளுக்கு அவள் சமையல் மட்டுமே வயிறை நிறைத்துக்கொண்டாள். மூன்றாவது மகன் மகேஷ் மாதம் தவறாது அனுப்பும் ஆயிரம் ரூபாய் மணிஆர்டர் மட்டும் வாழவில்லை அவள்.

வைராக்கியகாரி..அவளுக்கென்று கைத்தொழில் ஒன்று அவளை யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழவைத்துக்கொண்டிருந்தது.அது தான் கூடைபின்னல்.வித விதமாக கூடை பின்னி அவளுக்கு தெரிந்தவர்களுக்கு விற்றாள்.

5 வருடங்களுக்கு முன்பு "என்னட்டீ அறுந்த வாலு.."வைஷ்ணவியின் ஜடையைப்பிடித்து இழுத்து குறும்பு செய்தாள் பழனியம்மாள்."ம்ஹூம்..வந்துட்டியா பாட்டி. எப்ப பார்த்தாலும் என் குடும்பியை பிடிச்சு இழுக்கல்ல.. ஒரு நாள் உன் கொண்டையை பிடிச்சு இழுத்துவிடுறேன் பாரு..ம்மா.. பழனிபாட்டி வந்துருக்கா பாரு.." கத்திக்கொண்டே உள்ளே சென்றாள் பக்கத்துவீட்டு வாலு பாப்பா வைஷ்ணவி.

"வாங்க சித்தி.. உங்க மருமகன் மில்லுக்கு போய்ட்டாரு.. இவளுக்கு இன்னைக்கு ஸ்கூல் லீவு அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்.." கலைந்த தலையை சரிசெய்துகொண்டே சொன்னாள் செண்பகம்..
செண்பகம் பழனியம்மாள் வீட்டிற்கு பக்கத்துவீடு.. 20 வருடங்களாக இவர்கள் இரு குடும்பமும் மிக நெருக்கமான நண்பர்கள்.பழனியம்மாளுடன் அரட்டை அடிக்கும் கிழவி பொன்னம்மாவின் மருமகள் செண்பகம் தன் தாயைப்போலவே நினைத்து பழகுவாள் பழனியம்மாளிடம்..
"சித்தி.. காபி தரட்டுமா?" பாசத்துடன் கேட்டாள் செண்பகம். "தண்ணி மட்டும் குடும்மா போதும்.." திண்ணையில் சாய்ந்து கொண்டு காலை நீட்டி விட்டாள்.
"ஏய்.. வைஷ்ணவி... பாட்டிக்கு தண்ணி மோந்துட்டு வாட்டீ.." செண்பகம் தன் மகளை ஏவினாள். எரிச்சலுடன் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தாள் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு வாயாடி வைஷ்ணவி.
அதுவரை தாகமில்லாமலிருந்த வைஷ்ணவிக்கு செம்பில் தண்ணீரைப்பார்த்தவுடன் தாகமெடுத்தது.அண்ணாந்து தண்ணீரை ஒரு வாய் பருகினாள். "ஏட்டீ எனக்கென்ன எச்சித்தண்ணியவா தரப்பாக்குற? போட்டீ வேற தண்ணிக் கொண்டு வா.." என விரட்டினாள்.மனதிற்குள் கிழவியைத் திட்டியவாறே சென்றாள்.

"ஏட்டீ.. செம்பகம். உன் புருஷன் என்னடி வேலைக்குப் போகும்போது சாப்பாட்டுப் பாத்திரத்தை பிளாஸ்டிக் கவர்ல எடுத்துட்டு போறான்.. ஒரு கூடையைத்த்கான் வாங்கிக் குடுக்கக் கூடாதா? சித்திக்கிட்ட ஒரு கூடை வாங்கிக்கோயேன். ராசி நல்லா இருக்கும்."
"வேண்டாம் சித்தி.. தேவை இல்லாத செலவு.."
"உன்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது, உன் மாமியார் மஞ்சப்பையில தான் பழத்தயெல்லாம் வெச்சுக்கொண்டாந்த்துச்சு.நான் தான் அப்றம் அந்த மயில்படம் போட்ட கூடையை குடுத்துவிட்டேன். அத அங்கயே உன் மாமியார் மறந்து விட்டுட்டு வரத்தானே நீ இந்த வீட்டுக்கு மருமவளா வந்த?!! கள்ளி.. ஹா ஹா.." என்று பொக்கை வாயைக் காட்டியபடி சிரித்தாள் பழனியம்மாள்.

பக்கத்து வீட்டு பொன்னம்மா தன் பெரியமகனுக்கு செண்பகத்தை பெண் பார்க்கச் சென்று பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டாள்.அவள் அங்கே மறந்துவைத்து வந்த பையை எடுக்கச் சென்று பழக்கமானவர்கள் தான் செண்பகமும் அவள் கணவரும்.அதாவது பொன்னம்மாவின் சின்னமகன்.
கிழவியின் கிண்டலில் சற்றே வெட்கம் கொண்டவாறே "சரி சித்தி. இந்தா நூறு ரூவா.. அப்றமா வைஷ்ணவிக்கிட்ட கூடையை குடுத்து அனுப்பு." என்று கூறினாள்.

இப்படியெல்லாம் தந்திரமாக பேசிக்கொண்டிருந்த பழனியம்மாள் இன்று தன் நிலை அறியாமல் இருக்கிறாள்.யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பவள் இன்று யாருமில்லாமல் தனித்து நிற்கிறாள். வாய்படாத தண்ணீரைக்கூட எச்சில் தண்ணீர் என்று சுத்தமாக இருப்பவள், இன்று சுகாதாரமில்லாமல் இருக்கிறாள்.

ஊரில் தனக்கு தெரிந்தவர்கள் யாருக்கு திருமணம் என்றாலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து "தாத்தா படத்த தொட்டுக் கும்ப்டுக்கோய்யா.. இந்தா நூறு ரூவா.. மகராசனா இருய்யா.."என்று வாயார வாழ்த்துக்கள் கூறுவாள். ஆனால் இன்று வார்த்தைகள் மறந்துவிட்டாள்.

3 

இன்று மாலை ஆறுமணிக்கு வெங்கட் வீட்டிற்கு சென்று "எப்பா.. அவள வர சொல்லுப்பா"என்று அவசர அவசரமாக கூறினாள். "யாரம்மா".
"அவளதான்..மவள"
"இவளுக்கு யாரு பேரும் நியாவத்துல நின்னு தொலயாதே.. யார உன் மூத்த மவ ராணியவா?"
"இல்ல பா."
" ரெண்டாவது மவ மலர்விழியா?,மூணாவது மவ கல்பனாவா? நீ யார வர சொல்லணும்னாலும் நேர்ல தான் போய் சொல்லணும். செல்லுல காசு இல்ல."
"அவள இல்ல.." என்று சொல்லும்போதே வந்து நின்றாள் வெங்கட் மகள் பவித்ரா.. "வா.. வா ஆச்சி வீட்டுக்கு வா.." என்று அழைத்து சென்றாள் .
" இவ என்ன டி .. புள்ள பேரு கூடவா வாய்ல வராது? ஏன் இப்படி மறதி வந்து தொலையுது?"
வெங்கட் சோகத்துடன் தன் மனைவியிடம் கேட்டார்.
"நான் தான் சொல்றேன்ல . உங்க அம்மாக்கு வர வர ரொம்ப மறதி அதிகமாயிட்டே வருதுன்னு.." மாமியாரைப் பற்றி குறை கூறினாள் வெங்கடேசனின் மனைவி. "ம்மா.. ஆச்சி குடுத்தாம்மா..." என்று பவித்ரா ஒரு பித்தளை விளக்கைக் காட்டினாள்.
"நான் சொன்னேன் பாத்தீங்களா?? உங்க அம்மாக்கு ஏதோ ஆயிடுச்சு. யாரு கேட்டாலும் குடுக்காத அவங்க பொறந்த வீட்டு சீதனத்த ஏன் நம்ம புள்ளைக்கு தரணும்.."
"விடுடி அவளுக்கு சீக்கிரமா சாகபோறதா தோணுச்சோ என்னவோ.. "
பவித்ரா என்றால் பழனியம்மாளுக்கு கொள்ளை பிரியம். அவளின் இயற்பெயர் பவித்ரா()பழனியம்மாள். ஊரில் எல்லோரும் அவளை "சின்ன பழனியம்மா" என அழைக்கும்போது பழனியம்மாளுக்கு பெருமிதமாக தெரியும்.வெங்கடேசன் பழனியம்மாள் வசிக்கும் தெருவிலேயே வசிப்பதால் ஆறு பிள்ளைகளில் அவனுக்கு மட்டுமே பழனியம்மாளின் நடவடிக்கைகளின் வித்தியாசம் நன்கு தெரிந்தது.
முன்பெல்லாம் வெங்கட் காலையில் காபி குடிப்பதற்கு அம்மா வீட்டிற்கு செல்வது தான் வழக்கம்.காலை கடன்களை முடித்ததும் பனியன் வேட்டி அணிந்துகொண்டு கழுத்தில் ஒரு துண்டுடன் அம்மா வீட்டில் அடுப்பாங்கறை வாசலில் உட்கார்ந்துகொண்டே அம்மாவுடன் கதையடித்துகொண்டே காபி குடிப்பது வழக்கம்.
பத்து வருடங்களுக்கு முன்பு இப்படி காபி குடித்துகொண்டிருக்கும்போது நடந்த சம்பவத்தை வெங்கடேசன் மறந்திருக்கமாட்டார். வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது.
"பாட்டி.. பாட்டி.." ஒரு பையன் வாசலில் கதவை தட்டினான்.வெளியே வந்து பார்த்தார் வெங்கடேசன். "ஏல கீழ போட்டுடாதல.. " ஒனிடா கலர் டிவியை கீழே இறக்கி வைத்தனர்.
"வந்துட்டியாப்பா.. அந்த மேச மேல வெச்சுடு.." வெங்கட் தன்னைபார்த்து முறைப்பது தெரிந்தும் அதை பார்க்காதது போல அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள் பழனியம்மாள்.
"என்னம்மா இதெல்லாம்.. நாந்தான் டிவி வாங்கி தர்றேன்னு சொன்னேன்ல.. அதுக்குள்ள என்ன அவசரம்?" கோபமாக கேள்வி கேட்டார்.
"ஆமாம்ல.. நீ இந்த மாசம் உன் மச்சினிச்சிக்கு வளகாப்பு, அடுத்த மாசம் பொண்டாட்டிக்கு வளையல்னு ஒவ்வொரு மாசமா இழுத்தடிப்ப.. அதான் நான் கொண்டாந்து வைக்க சொன்னேன்...தம்பி.. அந்த நாற்காலிய எடுத்துக்கோப்பா.."

"இவளுக்கு யாரு டிவி கடையை காமிச்சு குடுத்ததுன்னு தெரியலயே.. எவ்வளவுன்னு தெரியலயே?!!!" முழித்து கொண்டிருந்தார் வெங்கடேசன். "ரொம்ப யோசிக்காதல.. இன்சாமெட்ல தான் வான்கினேன்.. மாசம் எறநூத்து அம்பது ரூவா தான்.." என்றாள்.
"இதுல இங்க்லீஷ் வேற.." மனதிற்குள் நினத்துக்கொண்டிருக்கும்போதே , "சார் இதுல ஒரு கையெழுத்து போடுங்க சார்.." ஒரு தாளை கொண்டு வந்து நீட்டினான் அந்த சிறுவன்..
"சாயந்திரம் என்னோட கடையில வந்து வாங்கிக்கோப்பா.." கையெழுத்திடும்போது பழனியம்மாளை முறத்துக்கொண்டிருந்தார்..ஆனல் அவள் ரிமோட் ஆபரேட் செய்யக் கற்றுக்கொண்டிருந்தாள்.
அன்று மாலயே ஏழு மணிக்கு "யார கேட்டு நீ டிவி வாங்குன?.. இப்போ என்ன அவசரம் உனக்கு?? அந்த பொன்னம்மா கிழவி கூட பேசிட்டு இருக்க வேண்டியது தானே??"
"அவளுக்கு தான் இழுத்துட்டு கெடக்குல்லா..'
"இப்போ இதுக்கு யாரு காசு கட்டுவா?"
"நீ ஒண்ணும் கட்ட வேண்டாம்.. நானே கட்டிக்குவேன்.. பழைய டிவியை உன் மவன் தானல பந்து அடிச்சு நொறுக்கினான்.. ஆறு மாசம் ஆச்சு.. நீயா வாங்கித் தருவன்னு பாத்தேன்.. தரல. அதான் நானே வாங்கிக்கிட்டேன்"
"ஊருல இருக்குற கிழவிக்கெல்லாம் எதாச்சு ஆவுது.. உனக்கொண்ணும் ஆகமாட்டேங்குது பாரு.."
"ஏலே.. நீ ஒண்ணும் எனக்காக எதும் செய்ய வேண்டாம்.. எனக்கு என்னோட மூத்த மகன் இருக்கான்.. ராசா மாதிரி..அவன் இருக்குற வரைக்கும் எனக்கு ஒரு கவலையும் இல்ல..பெத்த தாய்க்காக இத கூட செய்ய மாட்டிக்கிறீயே. நாளைக்குல்லாம் நான் செத்தா கூட நீ என்னை பாக்க வராத.." என்று குமுறினாள்.
"கவலப்படாத.. உன்னை கொல்லப்போறதே நான் தான்.." என்று கோபத்தில் நாற்காலியை காலால் உதைத்துவிட்டு வீட்டிற்கு சென்று பணம் கட்டிய ரசீதை மனைவிக்கு தெரியாமல் கிழித்து எறிந்தார்.
சற்று நேரத்திலேயே கிழவியின் சாமர்த்தியத்தை நினைத்து சிரித்துக்கொண்டார்.
"இந்தாம்மா.. சின்ன பழனி.. அப்பாக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வா.." என்று மகளை அழைத்தார்..
அப்படியெல்லாம் சாமர்த்தியமாக இருந்த கிழவி மூன்று வருடங்களாக தான் மறதியுடன் திரிகிறாள். அவளது மூத்த மகன் தான் அவளை இந்நிலைக்கு தள்ளியது

4


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த கொடூர சம்பவம் மறக்கக் கூடியதா?? தீபாவளி அன்று மாலையில்..
இளைய மகன் மகேஷ் வாங்கி தந்த கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.அவன் சொல்லி கொடுத்தது போல பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்து "அலோ.. " என்றாள் பழனியம்மாள்.
"ம்மா. நான்தான் சரவணன் பேசுறேன்.."
"பெரியவனா?.. என்னய்யா? தீபாளியெல்லாம் நல்லா சிறப்பா முடிஞ்சுதா? கொஞ்சம் அதிரசம் பண்ணி வெச்சுருக்கேன்.வீட்டுக்கு வந்து சாப்டுய்யா.."
"ம்மா நான் சாய்ந்திரம் மெட்ராசுக்கு போறேன்.. என் பேத்திக்கு தடுப்பூசி போடணும்.."
"அப்படியாய்யா.. சரி.. இங்க ஒருதடவ வந்துட்டு போயேன்.."
"மெட்ராஸ் போக ட்ரெயின்க்கு லேட்டாயிடும்மா.."
"மெதுவடை செய்யல... அதிரசம் தான் செஞ்சேன்.."
"ம்மா.. மெட்ராஸுக்கு ட்ரெயின்ல போறேன்னு சொன்னேன்"..
"சரிப்பா.. பத்ரம்மா போயிட்டு வா.. அப்றம் உன் தம்பி மகேசு எனக்கு ஒரு நீல கல்ரல சேல வாங்கி அனுப்பிருக்கான்.. அலோ.. அலோ.. " வெச்சுட்டானாக்கும்..
மறுநாள் காலையில் வெங்கடேசன் வழக்கம்போல அடுப்பாங்கறை வாசலில் வந்து உட்காரவும் பழனியம்மாள் காபியுடன் அவனருகில் அமர்ந்தாள். அடுத்த நொடியில் அவர் கழுத்தில் இருந்த துண்டால் வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தார்..
"ஏன்யா.. என்னாச்சு?""
"அம்மா... அண்ணன் நம்மளயெல்லாம் வுட்டுட்டு போயிட்டான்மா.."
"என்னய்யா சொல்லுத? மெட்ராசுக்கு போறேனு தானய்ய நேத்து போன்ல சொன்னான்.."
"அங்கயே நெஞ்சு வலி வந்துடுச்சாம்..அண்ணி போன் பண்ணுச்சு.." அழுகையை விழுங்கியவாறே சொன்னார்.
கண்ணீரை துடைத்துவிட்டு பார்த்தபோது பழனியம்மாள் மயங்கிகிடந்தாள். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து காபி குடித்தது அதுதான் கடைசியாக இருந்தது.. அவள் கண்விழித்தபோது மருமகள் மடியில் படுத்து கிடந்தாள்.. "அத்த.. எந்திங்க அத்த.." என்று கத்தி கொண்டிருந்தாள் வெங்கடேசன் மனைவி.. பக்கத்து வீட்டு செண்பகம் கண்முன்னாலழுதுகொண்டிருந்த போது தான் மயக்கத்திற்கான் காரணம் புரிந்தது.
பாவம்.. 75 வயதில் அவள் உயிரோடிக்கும்போது மகனை பிணமாக பார்க்க எந்த தாய்க்குதான் தாங்கிக்கொள்ள முடியும்? 48 வயதில் கணவரின் மரணம். தனது பிள்ளைகளுக்காக மனதை தானே தேற்றிக்கொண்டு மீண்டு வந்துவிட்டாள். அவர்களின் திருமணம் முடிந்த பிறகு அவளுடைய மூத்தமருமகனின் மரணம்.. விதவைக்கோலத்தில் மூத்தமகள் வந்து நிற்கிறாள். திருமணமாக வேண்டிய வயதில் பேத்தி தந்தையை இழந்து நிற்கிறாள்.. அக்கணத்தில் பழனியம்மாளும் பாதி இறந்துதான் போனாள்..
15 வயதில் திருமணமான பழனியம்மாளுக்கு 16 வயதில் மூத்த மகன் சரவணன் பிறந்தான். அப்படியே தன் கணவன் முக சாயல். எத்தனை செல்லமாக வளர்த்தாள். 16 வயது வரை மகனை சைக்கிள் கற்றுகொள்ள விடவில்லை.. ஓடி விளையாடினால் கால் வலிக்குமென பொத்தி பொத்தி வளர்த்த மகன் இப்படியா பிணமாக வந்து நிற்பான்..
"எனக்கு என் பெரியவன் ஒருத்தன் போதும்ல.. என்னை அவன் தங்கத்தட்ல வெச்சு பாத்துகிடுவான்.. " என்று ஊர் முழுவதும் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டவள். அவரும் 1970களிலேயே M.A பட்டம் பெற்று அரசாங்க உத்யோகத்தில் இருந்தவர்..
அவரும் அவள் அன்னையை போல தான். உழைப்புக்கும், அன்புக்கும் சின்னமாக இருந்தவர். பரீட்சைக்கு முந்தைய நாளில் கூட, அப்பாவிற்கு மருந்து வாங்கித்தந்து தான் படிப்பார். அவரின் கல்லூரி காலத்தில் இளைய தங்கை கல்பனா தொட்டில் குழந்தை. அவளுக்கு தொட்டில் ஆட்டி விட்டுக்கொண்டே படித்தார்.
கணவரை இழந்த தன் பெரிய தங்கை மகளின் கல்யாணத்தையும் இவரே நடத்தி வைத்தார். பணி நிறைவு பெற்று ஓய்வு காலத்தை தன் பேரன் பேத்தியுடன் கழிக்கச் சென்றவர்.இப்படி குடும்பத்தில் இருளை உருவாக்கிவிட்டு போய்விட்டார்..போயே போய்விட்டார்.
"ஆலமரத்தோட ஆணிவேரே சாஞ்சிடுச்சே.. இனி என் பெரியவன் பெரியவன்னு நான் யாரைக் கூப்டுவேன். ரிட்டாடு ஆயிட்டு உன்கூட வந்து ஒரு மாசம் இருக்கேன்மான்னு சொன்னானே.." என அவரை சுமந்த தன் வயிற்றில் அடித்து அடித்து அழுதாள். அழுதாலும் இனி அவர் வரவா போகிறார்?
"உன் தாத்தா போயிட்டானேம்மா.. நீ ஏம்ம போக வுட்ட?" என்று அவரின் பேத்தியிடம் அழுதவாறே உதட்டை பிதுக்கிகொண்டு கேட்டாள்
கொள்ளுப்பாட்டியின் முகத்தை பார்க்கையில் அந்த 2வருட குழந்தைக்கு சிரிப்புதான் வந்தது. மழலைக்கு மரணத்தின் துயரம் தான் புரியுமா?
இன்று வரை பழனியம்மாளின் வீட்டில் கடைசி சிரிப்பு சத்தம் அதுதான்..



https://www.facebook.com/Nizhaloviyam?fref=nf

5
மரண கோலத்தில் தன் அண்ணனை பார்த்த வீட்டுக்கு இனி என்னால் வர இயலாது என ஒரு குழந்தையைப்போல அடம்பிடித்தார் வெங்கடேசன். "காலையில நீ வராம பொழுதே விடியமாட்டேங்குது.. வந்து ஒரு காபி குடிச்சுட்டு போய்யா.." கெஞ்சினாள் பழனியம்மாள்.
"என்னத்தையாவது சொல்லி என் வாய கிளறாத.. யேய் அம்மாக்கு காபி குடுடி.." மனைவியிடம் சொல்லிவிட்டு கண்ணீரை அடக்கிகொண்டு வெளியே சென்றுவிட்டார்.
தாய்க்கு தெரியாதா பிள்ளையின் மன உளைச்சல்?. அதன் பிறகு அவளும் வெங்கடேசனை தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. தனது அன்றாட வேலைகளை சுத்தமாக செய்து வந்தாள். டிவியில் மெகா சீரியல்கள் பார்ப்பதும், வயர்கூடைகளை பின்னுவதுமாக மரணத்தை நோக்கிய தன் பயணத்தை மேற்கொண்டாள். டெல்லியிலிருக்கும் இளைய மகன் மகேஷ் வருடத்திற்கு ஒருமுறை மனைவி மகனோடு வருவான்.
மகன் மரணத்திற்கு பிறகு முட்டி வலி அதிகமானது. இருந்த போதிலும் மாடியிலிருக்கும் அறைக்குச்சென்று மகனின் புத்தகங்களை எடுத்து அவனை நினைத்துக்கொள்வாள்.
"கொடுத்து வெச்சவ பொன்னம்மா.. போய் சேந்துட்டா.. அவ கூட சேந்து கத அடிச்சுட்டு கெடந்தவ நான் இன்னும் பூமிக்கு பாரமா இருக்கேன். என மனதிற்குள் மட்டும் புலம்பிக்கொள்வாள்.
மாடிஅறையிலிருக்கும் பழைய பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்களை ஒவ்வொரு மகள்கள் வீட்டிற்கும் சென்று குடுத்துவிட்டு ஓரிரு நாட்கள் தங்கி வந்தாள். அதற்கு மேல் எவ்வளவு கெஞ்சினாலும் இருக்க மாட்டாள்.
தனது நினவை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மெல்ல மெல்ல உண்ர்ந்தாள். ஆனால் இது மரணத்திற்க்கான அழைப்பாய் இருக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டாள். தான் இறுதிக்காலத்தில் யாருக்கும் பாரமாகிவிடக்கூடாது என உறுதியாக இருந்தாள்.
ஒரு நாள்,
மலர்விழி பழனியம்மாளின் வீட்டிற்கு வந்து சமைத்துக் கொடுத்து சாப்பிட சொன்னாள்.அவள் சற்று அதிர்ந்து தான் போனாள். ஊறுகாய் என்ற வார்த்தைக்கு ".. ..." என நாக்கில் விரல் வைத்தும் , காரமான சாப்ப்பாடு என்பதை "சாப்பாடு ஸ்.. ஸ்.." என்றும் பழனியம்மாள் சைகையில் பேசினாள். மலர்விழி மன நொந்தவாறே தன் வீட்டிற்கு சென்றாள்.
"என்னங்க.. எங்கம்மா வந்து ரெண்டு நாள் இங்க இருக்கட்டுமா?" என்று மலர்விழி தன் கணவனிடம் கேட்டாள்.
அவரிடமிருந்து பதில் வருவதற்குள் "ம்மா.. ஆச்சி வந்தா சும்மாவே இருக்க மாட்டா... எதாச்சும் சொன்னதயே சொல்லி சொல்லி உயிர வாங்குவா.. நைட்டு தூக்கத்துல எழுப்பி பாத்ரூம் போணும்னு எழுப்புவா.. நீ வேற மாத்திர போட்டுட்டு தூங்குவ. பாத்துக்கோ.." என்றான் மலர்விழியின் மகன் வேலன்.
"ஏன்ல.. உங்க அம்ம மேல உனக்கு இருக்குற அக்கற தான எங்க அம்மா மேல எனக்கிருக்கும்.. அவளால முன்னாடி மாதிரி தனியா கூட வர முடியாது. நாம தான் போய் கூட்டிட்டு வரணும்."
"சரி.. உங்க அண்ணான்கிட்ட சொல்லி பஸ் ஏத்திவிட சொல்லு." என்றார் மலர்விழியின் கணவர்.
"அண்ணே.. அம்மாவ ஊருக்கு பஸ் ஏத்தி விடு.. இங்கன வந்து அவ ரெண்டு நாள் இருக்கட்டும்.." வெங்கடேசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள் மலர்விழி.
"ஏய்.. உனக்கே உடம்பு சரிஇல்ல. அவ வந்தா சும்மா இருக்க மாட்டா.. தொணதொணன்னு ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பா.."
"பரவா இல்லண்ணே.. அனுப்பி வை.."
"சரிம்மா.. டேய் கிரி பாட்டிய மலர் அத்தை வீட்டுக்கு அனுப்பி வை.." தன் மகனுக்கு உத்தரவிட்டார் வெங்கடேசன்.
"ப்பா.. நான் கிரிக்கெட் விளயாட கிளம்பிட்டேன்.." சிணுங்கினான் கிரி..
"ஏலே..காலேஜ் படிப்பு முடிய போவுது எப்ப பாரு.. பாழாபோன கிரிக்கெட்டு தானா?.. வேல தேடணும்ங்ற எண்ணமே இல்லயா?.. போ போய் சொன்னத செய் இந்தா வண்டி சாவி" என திட்டி விட்டு குடுத்தார்.
வண்டிசாவியை பார்த்ததும் "சரி போறேன்.."என்று சிரித்துகொண்டே சொன்னான்.
"பாட்டி சட்டுனு கிளம்பு.." நண்பர்கள் இவனுக்காக காத்திருக்கும் அவசரத்தை பாட்டியிடம் கோபமாக காட்டினான்
"இருல ஒரு சேலை மடிச்சு வெச்சுட்டு வர்றேன்." என மணிபர்சுடன் அவனுடன் வண்டியில் கிளம்பினாள். "ஏலே.. மெதுவா ஓட்டு.. உன் தங்கச்சி என்ன பண்ணிட்டு இருக்கா"
"ஆச்சி.. அது அக்கா.. தங்கச்சி இல்ல.. பேசாம வா.. இல்லன்னா தள்ளி விட்டுடுவேன் பாத்துக்கோ.." எரிச்சலுடன் கூறினான். தொலைபேசி அழைப்பு வந்தது.
"என்னப்பா.."
"எலே.. ஆச்சிக்கு ஒரு பேப்பர்ல அத்தையோட வீட்டு அட்ரஸ் எழுதிக்குடு.. அவபாட்டுக்கு எங்கயாச்சும் போயிடப்போறா.."
"சரிப்பா.." என் பஸ்ஸ்டாண்டில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்புவதற்குள் பாட்டியைக் காணவில்லை.சுற்றிமுற்றி பார்த்தபோது அந்த ஊதாநிற புடவை ஸ்வீட்கடையின் முன்பு நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தான்.
"என்ன வேணும் பாட்டி.." கடைக்காரன் கேட்டன்.
"ஒண்ணு குடுப்பா.."
"எது பாட்டி..?"
"...."
ஓடி வந்த கிரி "என்ன ஆச்சி ஸ்வீட் வாங்க போறியா? சொல்லிட்டு வரமாட்டியா? திரும்பி பாக்குறதுக்குள்ள காணாம போயிட்ட?"
அவனுக்கு பதிலளிக்காமல் ஸ்வீட் என்ற வார்த்தையை கண்டறிந்தவுடனேயே "ஸ்வீட் குடுப்பா.." என்றாள் கடைக்காரனிடம் தன் பொக்கை வாயைக்காட்டி சிரித்தபடி.
"எத்தனை கிலோ?"
கண்டுபிடித்துவிட்டாள் கிலோ என்ற வார்த்தையையும். "ஒரு கிலோ குடுப்பா.." பர்சிலிருந்து தன் மகன் அனுப்பிய காசை எடுத்து கொடுத்தாள்.
"நீயே காசு வெச்சுருக்கியா? அப்பா வேற காசு குடுக்க சொன்னாங்க" என்று தனது பெர்முடாசிலிருந்து பணத்தை எடுத்தான். அவன் அதை எண்ணிப்பார்ப்பதற்குள் அவன் கையிலிருந்து மொத்தத்தையும் பிடுங்கிக்கொண்டாள்
"அய்யா.. பாபநாசம் பஸ் எங்க நிக்கும்?" என பக்கத்தில் நின்று கொண்டிருப்பவரை பார்த்துக்கேட்டாள்.
கிரி முறைத்து கொண்டே கேட்டான் "ஏய்.. கிழவி அதான் நான் கூட வர்றேன்ல.. அப்றம் என்ன?"
"இல்லடா அவரு நம்ம தெருவுல பேப்பர் கடையில பாத்த மாதிரி இருக்குடா..அதான் கேட்டேன்"
"அய்யயோ பேப்பரா.. இரு ஆச்சி. ஒரு நிமிஷம்..அப்பா அட்ரஸ் எழுதிக்குடுக்க சொன்னாங்க" என் தன் பர்ஸிலிருந்த ஏ.டி.ம் ரெசிப்டின் பின்புறத்தில் அவசர அவசரமாக எழுதிகொடுத்தான்.
பழனியம்மாள் கையில் வாங்கியபோது இன்னொரு கையிலிருந்த கைபேசி அழைக்கவே அதனை எடுத்து "மச்சி.. சொல்லுடா.. 10.30க்கு அங்க இருப்பேன்டா.. ஆச்சி.. இந்த பஸ்ல ஏறிக்கோ.. டாட்டா.." என திரும்பிபார்க்காமல் சென்றுவிட்டான். அவன் கொடுத்த பேப்பரையும் அந்த பணத்தோடு கவனமில்லாமல் சேர்த்து வைத்த கொண்டு அவள் பஸ் ஏறிவிட்டாள்.
மாலை 4மணிக்கு மலர்விழியிடமிருந்து வெங்கட்க்கு அழைப்பு வந்தது..
"அண்ணே.. அம்மா அனுப்பிவைக்க சொன்னேனே..?"
"ஏய்.. என்னம்மா சொல்ற? அம்மா 10.30மணிக்கெல்லாம் பஸ் ஏறிட்டாளே!!!" அதிர்ச்சியுடன் கேட்டார் வெங்கடேசன்..

 

6



"என்னண்ணே.. அவ ஏற்கனவே நியாவமறதி கேஸ்.. டாக்டர் உன்கிட்டதானே சொன்னாரு..அவளுக்கு செல்போன்ல பேசவும் தெரியாது.இப்படியாணே செய்வ?" மலர்விழி முறையிட்டாள் .
"ஏய் கிரி.. அத்த அட்றஸ ஆச்சிக்கிட்ட குடுத்தியாலே.." கோபத்தில் கத்தினார் வெங்கடேசன்.

"ப்பா..நான் எழுதிக்கொடுத்த பேப்பரை ஆச்சி என்ன பண்ணுனான்னு தெரியலப்பா ." பம்மிக்கொண்டே சொன்னான் கிரி..
"அலோ.. அண்ணன்.. அவன் என்ன சொல்லுதான்?.."

இருவரில் யாருக்கு பதில் சொல்ல என்று தெரியாமல் "ம்மா.. நீ போன வைம்மா.. நான் மறுபடியும் உனக்கு கால் பண்றேன்.." கட் செய்துவிட்டு..
"எலே ஆச்சி கழுத்துல தங்க சங்கிலி வேற போட்டுட்டு போயிருக்கா..எவனாச்சும் நகைக்கு ஆசப்பட்டு..."

"இல்லப்பா.. நா அவகிட்ட பாபநாசம் பஸ்ஸ காமிச்சு அதுல ஏறிக்கோன்னு சொல்லிதான் விட்டேன்.." பதிலளிக்க நேரமில்லாமல் கிளம்பினார் வெங்கடேசன்..
பாபநாசத்தில்...
மாலை 5 மணிக்கு...
பதட்டத்துடன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள் மலர்விழி..
வண்டியில் மலர்விழி மகன் வேலன் பழனியம்மாளுடன் வந்து இறங்கினான். "எங்கம்மா போன..?" அழுகுரலில் மழர்விழி கேட்டாள்.
"ம்ம்ம்... ம்ஹூம்..." வாய் பேசாது அழத்தொடங்கினாள். இளைப்பாறிவிட்டு சிறிதுநேரம் கழித்து "செல்போன் வெச்சுருந்தா என்னம்மா?"மலர்விழி கேட்டாள்..
"இல்ல.. அதுல ஒருத்தி நம்பர் அமுக்க சொன்னா.. அமுக்கிக்கிட்டே இருந்தேன் அப்றம் எனக்கு துட்டு இல்ல.. அப்றம் அது கீழ விழுந்து.. அப்றம் தம்பி மறுபடியும் வாங்கிட்டு போயிட்டான்" பிதற்றினாள் பழனியம்மாள்
"கீழ விழுந்த்து உடஞ்சத ரிப்பேர் பண்ண குடுத்துருக்கானக்கும்..."
"ஆமா.. ஆமா.."
"இனிமேல் அத உன்கிட்ட குடுத்தாலும் ஒரு பொரயோஜனமும் இல்ல.. " சலித்துகொண்டாள் மலர்விழி.
"ம்மா... அவகிட்ட போய் கேப்பியா? அவ பாபநாசம் பஸ் ஏறிட்டு பஸ்ல பாளையங்கோட்டைக்கு போணும்னு

சொல்லியிருக்கா..கண்டக்டர் என்ன பண்றதுன்னு தெரியாம நம்ம பக்கத்து ஊரு போலீஸ் ஸ்டேஷன்ல வுட்டுட்டு போயிட்டாரு.என் மவா வீட்டுக்கு போணும்னு சின்ன புள்ளை மாதிரி அழுதுட்டு இருந்துருக்கா.. அப்றம் மதியத்துக்கு அப்றம்தான்போலீஸ்காரங்க இவள விசாரிக்கவே ஆரம்பிச்சுருக்காங்க. இவ பையை தேடிப்பாத்ததுல நம்ம வீட்டு மொபைல்நம்பர் இந்த பேப்பர்ல இருக்கவும் கால் பண்ணி கூப்ட்டாங்க. இதுக்குதான் நான் ஆச்சிய கூப்டவேண்டாம்னு சொன்னேன்." பழனியம்மாளைப்பார்த்து கத்தினான் வேலன்.
குழந்தையைபோல அழுத பழனியம்மாள் "பாரு என்னை திட்டிகிட்டே இருக்கான்.." என்பது போல மலர்விழியிடம் அவனைக்காண்பித்து சற்று அதிகமாக அழுதாள்.
மலர்விழியின் வீட்டிற்கு பக்கத்த்து வீட்டிலிருந்த பாட்டி பழனியம்மாளை வந்து பார்ப்பதும் பேசுவதுமாக இருந்ததிலும்..சுற்றத்தார் அதிகமாக பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்ததிலும் அவள் நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது..
வார்த்தைகளில் மட்டுமே முன்னேற்றம் இருந்தது.. நபர்களின் பெயர்கள் மனதில் பதியவில்லை.அவர்களின் குணாதிசயங்கள் அவளுக்கு நினைவிருந்தது.
"உங்க அக்கா மாமியா இருக்கா பாருடி.. நல்ல தங்கமான குணம் தான். இவ தான் அடங்காம அலையுறா.." புலம்பினாள் பழனியம்மாள்..

"சரிம்மா.. தூங்கவிடும்மா.."
"சரி தூங்கு.." என்று அமைதியாகிவிட்டாள்..
6நிமிடங்கள் கழித்து... "சொல்ல சொல்ல கேக்காம போனா பாத்தியா உங்க மதினி... அதான் இப்ப புருஷன் கூட சண்ட போட்டு வந்து நிக்கா.." மலர்விழி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து படார் என விழித்துக்கொண்டாள்.

"ம்மா.. தூங்குறியா..அவ என் மதினி இல்ல.. செண்பகத்தோட மதினி.. ஏன் பாடா படுத்துற?" உறக்கம் கலைந்த கோபத்தில உறக்க கத்திவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து.. ஏலே.. இவனே.. ஆச்சிக்கு வெளிய போவணும்.. கொஞ்சம் கதவ திறந்து வுடு.. எலேய்.. எய்யா.."

"ம்மா பாரும்மா.. இதுக்குதான் ஆச்சிய கூப்டாதன்னு சொன்னேன்.. தூங்க விடாம பாடா படுத்துறா பாரும்மா.நாளைக்கு நான் ஆஃபீஸ்க்கு போன மாதிரிதான்." எரிச்சலுடன் எழுந்தான் வேலன்.

"நல்ல விலைக்கு போகுதுடி பிளாஸ்டிக் டப்பா எல்லாம்...", "நான் சொன்னததான் கேக்கல.. ச்சேரி...நல்லா இருக்கணும் அவன் ." என இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அழுகை கோபம் எல்லாவற்றையும் வார்த்தைகளாகவே வெளிப்படுத்தினாள் பழனியம்மாள் நீண்டநாட்களுக்கு பிறகு..


7

ஒருநாள் மாலை 6 மணிக்கு..

மலர்விழி மல்லிகைபூ தொடுத்துக்கொண்டிருந்தாள். கால் நீட்டி அதைப்பார்த்துக்கொண்டேயிருந்த்தாள் பழனியம்மாள்.
வீடெல்லாம் பூமணம்..

"எதுக்குடீ.. இந்த வயசுல போய் பூ விக்குற.. இத விட பிளாஸ்டிக் கூட நல்ல விலைக்கு போவுது.."

"ம்மா.. நான் பூ விக்கல..நாளைக்கு சாமிக்கு போடுறதுக்குதான் மாலை கட்டிட்டு இருக்கேன்.. " பூ கட்டிக்கொண்டே பதிலளித்தாள் மலர்விழி.
"நான் பூக்கட்டி சம்பாதிச்சே புருஷன கட்டுனவ டி... நம்மாளயெல்லாம் இவ்ளோ மெதுவா பூ கட்ட வராதுடி.. உழைச்சுசம்பாதிச்ச சந்தோஷமே தனிதான்.."
"ஆமா.. ஆம்மா. நீங்க பொறந்ததுல இருந்து ரொம்ப உழைச்சுட்டு தான் இருந்தீக.. பெரிய கப்பல் வியாபாரி.." என மாமியாரை நக்கலடித்தார் மலர்விழியின் கணவன்.

"என்ன மலரு.. உன் வீட்டுக்காரருக்கு என்னப்ப்பத்தி சொன்னது இல்லயா?"
"ம்மா.. உன்னைப்பத்தி எனக்கே தெரியாது..நீ என்னைக்கு எங்ககிட்டயெல்லாம் உன் கதயெல்லாம் சொல்லியிருக்க.."
பழனியம்மாளுக்கு தன் பிறந்த வீட்டைப்பற்றிக்குறை கூறி ப்பழக்கமில்லை இந்த வயதிலும்.. ஆனால் இன்று தன்னையும் அறியாமல் உளற ஆரம்பித்தாள்.

"கேளுட்டீ கதய.. " என ஆரம்பித்தாள்..
"நீயெல்லாம் என்னடீ பூக்கட்டுற? அந்த காலத்துல எப்பவுமே என்மேல பூவாசம் தான்..எப்படி சரம்சரமா கட்டுவேன் தெரியுமா? பூவாசக்காரி வந்துட்டா.. அப்போ நல்ல சகுனம்தான்ன்னு எனக்கு எதிர்த்தாப்புல வர்றவெகுளெல்லாம் சொல்லுவாக.."
காபியை ஒருவாய் குடித்துக்கொண்டாள். "ம்ம்.. முதல்ல ஒரு மிட்டாய் கடையில தான் வேலபாத்துட்டு இருந்தேன்..அங்க உருட்டி உருட்டி குடுத்துட்டு இருந்த்தேன்.. அந்த காச எங்கப்பாட்ட தான் குடுத்துட்டுஇருந்தேன்ன்.அதுக்கப்பறம் நான் வயசுக்கு வந்துட்டேன்.. சமஞ்ச குமரிய என்னைக்கு வெளிய விட்டாக.."

"ப்பா.. இதென்னப்பா கிழவி சமஞ்ச கதயெல்லாம் சொல்லிட்டுருக்கு .." என வேலன் தன் தந்தையிடம் கிண்டலடித்துக்கொண்டான்..

" சும்மா இருல.. இந்த கிழவி ஆளுகலயெல்லாம் கண்டதும் திடீர்னு பிளாஷ்பேக் போடுதுபோல.." என அவர் கிழவியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்..

"அதுக்கப்றம் எங்க அண்ணன் என்னை வெளிய விடல...அதுவரைக்கும் நல்லா காசு சம்பாதிச்சுட்டு அதுக்கப்பறம் எப்படி சும்மா வீட்டுல உக்காந்துட்டு இருக்க முடியும்? அதனால தான் பூக்கட்ட ஆரம்பிச்சேன். அந்த வயசிலேயே நல்லா கட்டியா நெருக்கமா கட்டுவேண்டீ.. எங்க அப்பாக்கு நான் ரொம்ப செல்லம்.. அதனால எனக்கு மட்டும் தான் அந்த காசு.. என் அண்ணன்மார்களுக்குலாம் குடுக்கமாட்டாரு. எங்க அய்யா மட்டும் நல்லவரா இல்லன்னா.. என்னை இந்த இது ஊத்திக்கொன்னுருப்பாக .."

"எது ஆச்சி.. கள்ளிப்பாலா..?"ஆர்வமாக கெட்டான் வேலன்.
"ஆமால..."
"உங்கய்யா மட்டும் என்கையில கெடச்சாரு.. " பல்லைக்க்கடித்துக்கொண்டு மறுபடியும் தன் தந்தையிடன் பாட்டியைப்பற்றி கேலி செய்தான்.

"எனக்கு மொத்தன் மூணு அண்ணனுக.. என்மேல் அவ்ளோ பிரியமா இருப்பானுங்க.."
"என்னம்மா? எனக்கு மொத்தம் மூணு தாய் மாமனுகளா.. ரெண்டு பேருதானம்மா." அதிர்ச்சியுடன் கேட்டாள் மலர்விழி
"இதயெல்லாம் உங்க பெரியண்ணனுக்கு மட்டும்தான் தெரியும்.. அவன் தான் போய் சேந்துட்டானே. ஏய்.. பேசாம் இந்த கதயெல்லாம் எதுலயாச்சும் எழுதிவெச்சுக்கோயேன்.."

"சரி.. அது யாரும்மா அந்த மூணாவது அண்ணன்..?"
"அந்த சண்டாளனப்பத்தி மட்டும் பேசாத.. அவன் கூட சேந்த பய தான்டீ குடும்பத்த சங்கடப்பட வெச்சவன்.. விளக்குப்பொறுத்தி வெச்சுட்டு உட்கார்ந்துருக்கேன்.. அவன் எவனயோ கூட்டிட்டு வந்தான்.. அந்த வீணா போனவன் எதயோ பையை கொண்டாந்து இது வீட்டுல இருக்கட்டும். நான் ரெண்டு நாள்க்கு அப்றமா வந்து எடுத்துருக்கேன்னு சொன்னான்.."
"அவன் தான் வெச்சுட்டுபோறானே.. எங்க அண்ணனாச்சும் சும்மா இருந்துருக்கக் கூடாது.. இவன் அதுல என்னதான் இருகுனு பாத்தான்.. பூரா ஒரே நகை... எங்கபோய் திருடிட்டுவந்தானு தெரியல.. ரெண்டுநாளு கழிச்சு வந்துட்டு.. பையை யாரு தொறந்தது.. நான் தான் தொறந்து பாக்கவேண்டாம்னு சொன்னேனேன்னு வந்து கத்திட்டுப்போனா அந்த திருட்டுபோக்காலன்.. அன்னைக்கு இருந்துதான் எங்கவூட்டுலயே வெனை. அந்த சண்டாளி எதோ கோயில்லபோயி திருடிட்டு வந்து எங்க வீட்டுல வெச்சுட்டுபோயிருந்துருக்கான்.. அதுக்கப்றம் அவன் எதோ சூனியம் வெக்குறவன்கூட அவனப்பாத்ததா யாரோ வந்து சொன்னாங்க.. அப்போ கூட நாங்க அத நம்பல. எங்க அப்பா செத்துபோனதுக்கப்ப்றம்தான் தெரிஞ்சுது,. எங்கப்பா செத்ததுக்கப்பறம் என் அண்ணனுவ பூராம் வேல வேலன்னு வீட்டுக்கே வரமாட்டானுவ.. கடையிலயே கெடப்பானுங்க.. எங்க அம்மா காலையில போன வ சாயங்காலம் தான் காட்டுவேலயெல்லாம் முடிச்சுட்டு வருவா.. ஒத்தப்புள்ளாயா தனியா வளந்தேன்.. நாளைக்கு நீங்களும் அப்படி தனியா நின்னுட கூடாதுன்னு தான் இத்தன புள்ளைகள பெத்துபோட்டுருக்கேன்.. எங்க அம்மாவும் எதோ நோய் வந்துதான் கொஞ்ச நாள்லயே செத்துபோயிட்டா.. அவன் வெச்ச சூனியம் எங்க அய்யாவும் அம்மாவோட நின்னா பரவாயில்லயே.. எங்க மூத்த அண்ணனும் அவன் பொண்டாட்டியும் தீப்புடிச்சு செத்துபோயிட்டாவ..ஒரு சின்ன கொழந்த கூட இருந்துச்சு..அவன் என் கல்யாணத்துக்கு முன்னாலயே குடும்பத்தோட செத்துபோயிட்டதால அவனப் பத்தி உங்கிட்ட சொன்னதில்ல"
அதிர்ச்சியுற்றாள் மல்ரிவிழி.தன் அண்ணனுடய அகால மரணம் அவளுக்கு நினைவு வந்தது.. இந்த விஷயத்தில் வேலனுக்கு கேலி செய்யும் நரம்பு வேலைசெய்யதிருந்தது. மாமியாரின் பால்யபருவ துன்பங்களை புரிந்துகொண்டார் மலர்விழியின் கணவன்.

"அதுக்கப்றம் எங்க கிட்ட காசு இல்ல..கோயிலுக்கு பூக்கட்டி குடுத்து சம்பாதிச்சேண்டீ.. அப்றம் பக்கத்துவீட்டுல அங்கயும் இங்கயுமா ஒரு பத்து பதினஞ்சு வயசு வரைக்கும் பூகட்டுனேன்.. அப்போதான் உங்க அய்யா என்னை வந்து பொண்ணு பாத்துட்டு போனாரு., கட்டுனா இவளதான் கட்டுவேன்னு சொல்லீட்டு போயிட்டாரு.. ஆனா உங்க பாட்டி இவ்ளோ நகை கேட்டுட்டு போயிட்டா. அதுல பாதி நகை நானே பூகட்டி சம்பாதிச்சதுடீ.."

"யேவ்வ்வ்வ்.." காபி ஏப்பமாக வெளியே வந்தது.. காபி டம்ளரை கீழே வைத்துவிட்டு கதையை தொடர்ந்தாள்.

"அதுக்கு அப்புறமும் கூட அவன் வெச்சுட்டுப்போன சூனியம் எங்கள விடல.. அந்த வீட்டுலதான் இந்த மாமா இருந்தாண்டீ..." என கையை உயர்த்தி வார்த்தையை யோசித்துக்கொண்டிருந்தாள்.

"பெரியமாமாவா?.. ஆஞ் சொல்லு.. சொல்லு.."என ஆர்வமாக கதைக்கேட்டுக்கொண்டிருந்தாள்.
"ஆமா.. உன் பெரியமாமாவும் அவன் பொண்டாட்டியும் அந்த வீட்டுலதான் தங்கியிருந்தா.. திடீர்னு அவன் பொண்டாட்டியும் பேய்புடிச்சு செத்துப்போயிட்டா.. நல்லவேள.. உங்க அய்யா என்னை கல்யாணம்பண்ணிக்கூட்டிட்டு வந்துட்டாரு..இல்லன்னா எனக்கும் இது மாதிரி ஏதாவது ஆகியிருக்கும்.."

மலர்விழிக்கும் வேலனுக்கும் ஆச்சரியம் என்னவென்றால் பழனியம்மாள் எப்படி இந்த அளவுக்கு மடைதிறந்த வெள்ளமென தன் கதையை சொல்கிறாள் என்பது தான்..

உறவுகள் எத்தனை உயர்ந்தது?.அதன் இழப்பு தான் எத்தனை கொடியது?அதை தன் அன்னை எத்தனைமுறை தான் அனுபவித்திருக்கிறாள் என்று எண்ணி கலங்கினாள்.
"பாருல.. இவள. அந்த வயசுலயே இருந்து வேல பாக்க ஆரம்பிச்சவ, அம்மா அப்பா, அண்ணன்னையெல்லாம் பறிகொடுத்துட்டு என்னா கஷ்டப்பட்டுருந்துருக்கான்னு பாருல." என தன் மகன் வேலனிடம் கூறினாள் மலர்விழி.
"ம்ம்மா... உனக்கு அப்றம் ஆச்சிக்கு ஒரு குழந்தை பொறந்து இறந்து போச்சுன்னு சொல்லியிருக்கல்லா..?" கேட்டான் வேலன்.
"ஒண்ணா.. நல்லா அழகான ரெட்டை புள்ளைக.. மூளைக்காய்ச்சல் வந்து செத்துப் போயிடிச்சுக.. தலையில் கை வைத்தவாறே கூறினாள் மலர்விழி.

https://www.facebook.com/Nizhaloviyam?fref=nf



8

அன்று இரவு உணவு வேளையின்போது...
"மருமவனே சாப்டலயா?"மலர்விழியின் கணவனிடம் பழனியம்மாள் கேட்டாள்.
"சாப்டாச்சு அத்த. "
"அய்யா.. சாப்ட வாங்க.."
"அப்போதானே சாப்ட்டேன்.."
"அப்போ தானே சாப்டீய.. இப்போ வந்து சாப்டுங்க..ஏய்.. மலரு உன் வீட்டுகாரர வந்து சாப்ட சொல்லேண்டீ.."
"ம்மா.. அவுக அப்போதான் தோச சாப்ட்டாக...கொஞ்ச நேரம் கம்முனு கடயேன்.." குரலை சற்று உயர்த்திக் கூறிவிட்டாள் மலர்விழி..அடுத்த நொடியில் அவள் செய்த தவறு தெரிந்தது.
பேச்சை மாற்றுவதற்காக வெங்கட் அண்ணாவின் மனைவியைப்பற்றி பேச்சை இழுத்தாள் குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு பதில் கூறாமல் இருந்தாள். மலர்விழி மனம் வருந்தினாள்.
"மலர்.. உதவி பண்றேன்ற பேருல உனக்கு நீயே உபத்ரவத்த தேடிக்காதே.. மறுபடியும் உனக்கு பி.பி சுகர்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்கமுடியாது..உங்க அம்மாவ ஊருக்குபோக சொல்லு" மலர்விழியின் கணவன் மலரிடம் மெதுவான குரலில் அதிகாரத்தோடு கூறினார்.
"சும்மா போன்னு சொன்னா அவ பாட்டுக்கு எங்கயாச்சும் போய் நிக்கபோறா.. நானே நாளைக்கு அவளைகொண்டு போய் விட்டுட்டு வந்துரட்டுமா?"
"சரி.. வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துரு.."
அன்று இரவு மலர்விழிக்கு மனம் பாரமாய் தெரிந்தது. கணவர், மகன் இவர்கள் காட்டும் அக்கறை இந்த கிழவி கொடுத்த உடல் மீது தானே..இத்தனை பிள்ளைகளை பெற்று, வளர்த்து, அவர்களின் பிள்ளைகளையும் வளர்த்த தன் அன்னையை பார்த்துக்கொள்ள இயலவில்லையே என வருந்தினாள்.

உறவுகளின் இழப்பு என்பது முதியவர்களுக்கு கால்பங்கு உயிரிழப்பு போன்றதுதான் போல. அவள் அக்காவிற்கு பிறந்த குழந்தை 3 வயதில் இறந்த போது நோயுற்ற தந்தையின் மரணம் இதற்கு உதாரணமாய் இருந்தது. கணவனை இழந்தபோதுகூட இவள் இப்படி பித்துபிடித்து திரியவில்லையே. ஓய்வு வயதிலிருக்கும் தலைப்பிள்ளையை இழந்ததா இவளை இப்படி ஆக்கியது என எண்ணிக்கொண்டிருந்தாள்.

எத்தனை இழப்புகளைதான் அவள் வாழ்வில் கண்டிருக்கிறாள். தாய்,தந்தை, அண்ணன் குடும்பம், பால்மணத்தோடு இரட்டைக்குழந்தைகள், குடிகார மருமகன், 3வயது பேரன், இத்தனை இழப்புகளுக்குபின் தன் தலைமகனின் மரணத்தை தாங்கிக்கொள்ள மன உறுதி வற்றிதான் போய்விட்டது.

"பழனியம்மாளா? அடிச்சுப்போட்டா கூட அசையமாட்டா.. அவள மாதிரி தைரியம் இந்த ஊருல எவளுக்கு வரும்? ஒரு வீட்டுகல்யாணத்த கூட ஒத்தையா நின்னு நடத்திடுவாளே.. அவ மவளா நீ? என்று சிறுவயதில் தன்னை தன் மாமியார் புகழ்ந்தது மலர்விழி நினைவுக்கு வந்தது.

உரிமை விட்டுக்கொடுக்காத மனதைரியமும், உழைப்பால் உயரும் உடல் தைரியமும் பெற்ற தன் அன்னையின் திறமையைக் கண்டு அவளே பல நேரங்களில் பொறாமைப்பட்டதுமுண்டு. புதிய பலகாரம் எதும் சாப்பிட்டால் அந்த ருசியை நினைவில் வைத்து அதே பதார்த்தத்தை செய்து காட்டாமல் விடமாட்டாள்.எத்தனை பெரிய சிக்குகோலமாக இருந்தாலும் தனியாக போட்டுவிடுவாள்.மெகாசீரியலின் கதையை முதலாவது எபிஸோடில் இருந்துகூட சொல்வாள். பெயர் மறந்த திரைப்படத்தினைக்கூட நினைவுகூர்ந்து சொல்லிவிடுவாள்.

ஓரிரு ஆங்கில வார்த்தைகூட அவள் பேச்சுவழக்கில் சரளமாக வருவதுண்டு. "என் மருமகளுக்கு ரொம்ப பீவர். புளுக்கோஸ் லீக் ஆகுது பாரும்மா.." என நர்சிடம் கூறி "பாட்டி பரவாயில்லையே.. இங்க்லீஷ்லாம் பேசுறீங்களே.." என பாராட்டெல்லாம் வாங்கினவள் தான் பழனியம்மாள்.



9

காலையில்...
கிட்டத்தட்ட குழந்தைபருவதற்கே சென்றுவிட்ட தாயைப்பற்றி நினைத்துக்கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தாள் மலர்விழி.பின்வாசலில் ஏதோ சரபுரவென சத்தம்கேட்டுக்கொண்டிருந்தது.எட்டிப்பார்க்கையில் பழனியம்மாள் குப்பையிலிருந்த பிளாஸ்டிக் கவர்களையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தாள்.

"மலரு.. இந்த டப்பாவ நான் எடுத்துக்குறேண்டீ..என் வீட்டுல கெடக்குற அதயெல்லாம் இந்த டப்பாக்குள்ள போத்து வெச்ச்சுக்குவேன்" என தீப்பெட்டி உரசுவது போல சைகையில் கூறினாள்.
" தீக்குச்சியெல்லம் வீணாபோச்சுன்னா தூரப்பொடவேண்டியதுதானேம்மா.. அதெல்லாம் குப்பை.. அதுல போடும்மா." என கையிலிருந்து பிடுங்கி வைத்தாள்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது பழனியம்மாள் கையிலிருந்து அந்த பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வைத்திருந்த பையை மறுபடியும் பிடுங்கி வைப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது மலர்விழிக்கு.

பழனியம்மாள் வீட்டிற்குள் நுழைந்ததும் தனது வாடிக்கையான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். ஆனால் மலர்விழியோ அடுப்பறை வாசலில் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டாள்.இது பயண அலுப்பினால் வந்த சோர்வல்ல. பழனியம்மாளின் செய்கையினால் வந்த சோர்வு. சமயலறையின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியினருகில் எக்கசக்கமான பிளாஸ்டிக் கவர்கள், பூமாலை,திருஷ்டி பூசணிக்காய்.
"என்னம்மா இதெல்லாம்.." கண்ணீர்மல்க கேட்டாள். அது சாமி கழுத்தில் இருந்த பூமாலையா? இல்லை சடலத்தின் கழுத்திலிருந்த பூமாலையா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.
அவள் அழுகிறாள் அவள் கண்ணீர் விடுகிறாள் என்பது தெரிந்தும்கூட "ஏம்மா அழற.." என்ற வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.அந்த அறிவுமில்லை அவளுக்கு.
"எங்கிருந்தும்மா இவ்ளத்தையும் பொறுக்கிட்டு வந்த?" என மனவருத்ததுடன் மலர்விழி கேட்டாள்.
"அது தெரியலம்மா.. ஹா ஹா. " என தன் பொக்கை வாயைக்காட்டினாள்.
"உங்கிட்ட சண்ட போட்டாலும் உனக்கு புரியபோறது இல்ல.. சரி காபி போடு போ.." என்று கண்ணீரைத் துடைத்தவாறே கூறிவிட்டு மாடிப்படியேறினாள்.

இருமாதங்களுக்கு முன்பு மலர்விழியும் கல்பனாவும் சேர்ந்து மாடியில் சாமான்களை அடுக்கி வைத்திருந்தது மாறாமல் அப்படியே இருந்தது பழனியம்மாள் மாடிப்படியேறவில்லை என்பதை காட்டியது.
சிட்டுக்குருவி கூடு கட்டி வாழ்ந்த வீடு. வருடத்திற்கு ஒரு கல்யாணம், குழந்தைபேறு, மஞ்சள் நீராட்டுவிழா என எத்தனை சுபகாரியங்கள் நடந்தன. இப்போது சுத்தம் செய்யப்படாது இருக்கிறது. இதை தொடரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனச்சோர்வை அடக்கிக்கொண்டு எழுந்தது.கண்ணீரை இமைகள் என்னும் உதடுகளால் விழுங்கினாள்.

" மலரு.. இந்தா காபி.." கையில் கொடுக்கும்போது "இரு இரு சீனி போட்டு நல்லாவே கலக்கல.." என்று கூறி தன் ஆள்காட்டிவிரலை உள்ளேவிட்டு கலக்கினாள்.சுத்தத்தை கற்றுக்கொடுத்த தாயின் தற்போதைய நிலை அவள் நெஞ்சை உருக்குலைத்தது.அடுத்த துக்கத்தை சந்திப்பதற்குள் கிளம்பிவிட வேண்டுமென் கிளம்பிவிட்டாள் மலர்விழி.
"அப்பா போட்டோவ தொட்டுக்கும்ப்டுட்டு போம்மா.. இந்தா பிடி.." என திருநீறு பூசிவிட்ட கைகளால் நூறு ரூபாயை நீட்டினாள் பழனியம்மாள்
"ஆமா.. அப்படியே கர்ணன் பரம்பரை.. வாரி வழங்குறா.." என மனதிற்குள் நினைத்துக்கொண்டு கிளம்பி விட்டாள் பழனியம்மாள்.
"இவ யேன் இப்டி ஆயிட்டா..குளிக்காம சமயல் கூட பண்ண மாட்டா.. அவ்ளோ சுத்தம் பாத்தவளா இப்படி பிளாஸ்டிக் குப்பையை சேத்து வெச்சுருக்கா..அத வெச்சு என்ன பண்ணுவா?"என மலர் தன் ஜன்னலோர பேரூந்து பயணத்தில் யோசித்துக்கொண்டே வந்தாள்
அப்போதுதான் அன்று இரவு பழனியம்மாள் "நல்ல வெலைக்குப் போவுதுடி பிளாஸ்டிக் டப்பால்லாம்.." என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
"என்னதான் மகனுக காசு குடுத்தாலும் இவ அந்த காலத்துலயே கூடை பின்னி வித்து சம்பாதிச்சுட்டு இருந்தா.. இப்போல்லாம் எவ கூடை வாங்குறா? எல்லாரும் ஹேண்ட்பேக் மாட்டிட்டு சுத்துற இந்த காலத்துல அவ எப்படி சம்பாதிப்பா? அடுத்தவனுக்கு கீழ இவளா அடிமை மாதிரி வேல பாப்பா.. அப்போ சொந்தமா சம்பாதிக்கணும்னா இப்படியா பிளாஸ்டிக் குப்பையை சேத்து வெச்சு வித்து சம்பாதிப்பா?இப்படி குடும்ப மானத்த வாங்கிட்டு இருக்காளே..." என கையை விரிக்கும்போது "டிக்கட் வாங்கும்மா..." என கண்டக்டர் அவள் எண்னத்தில் குறுக்கிட்டார்..

டிக்கட் வாங்கிவிட்டு மறுபடியும் அவள் அன்னையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
"இவ எவ்ளோ தைரியமான பொம்பள? ஒரு வயசான மவன் செத்ததுக்கா இப்படி புத்தி பேதலிச்சு போவா? அப்படி பாத்தா எனக்கு அடுத்து பொறந்த அந்த ரெட்டை புள்ளைகளை பறிகொடுத்த அப்போவேல்லா இவ இப்படி ஆயிருக்கணும்.. அதுக்கடுத்து மகேஷ்,கல்பனாவையும் பெத்துக்க தைரியம் இருக்கதானே செஞ்சுது..எப்படி இருந்த அம்மாவ இப்படி ஆக்கிட்டு போயிட்டியே அண்ணே..." என இறந்த அண்ணனைத் திட்டினாள்.

எந்த குழப்பத்தையும் தன் தங்கை கல்பனாவிடம் பகிர்ந்து கொள்ளும் மலர்விழியால் இந்த விஷயத்தைப் பற்றி இப்போது பேச முடியவில்லை.. துக்கம் தொண்டைக்குள் நின்று கொண்டிருந்தது,

10

வீட்டிற்கு வந்துசேர்ந்தபோது அவளுக்கொரு தெளிவு பிறந்தது. சிறுவயதில் ஆதரவின்றி பாலைவனமாக தவித்த அவள் வாழ்வில் நீரூற்றி தழைக்க வைத்தவர் கணவன், அதில் முதல் மொட்டாய் மலர்ந்த தன் மூத்த மகன் சரவணன், அடுத்தடுத்து பெருகிய அவள் குடும்பம் அவள் வாழ்வை சோலைவனமாக மாற்றி, இன்று ஒற்றைமரமாய் தனித்து நிற்கிறாள். இத்தனை உறவுகளின் இழப்புகளிலிருந்து மீண்டு வர அவளால்முடிந்ததற்கு காரணம் அடுத்து அடுத்து அவள் வீட்டில் நடந்த சுபகாரியங்களும் சொந்த பந்தங்களின் சந்திப்புகளும்தான்.

பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை நாட்களில் தன் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் தன் மகள்களும் இப்போதெல்லாம் வருவதில்லை. ஏப்ரல் மே மாதங்களில் பேரன் பேத்திகளோடு கதையடித்து விட்டு குதூகலமாய் இருந்த வீடு இப்போது குப்பைகூளமாய் கிடக்கிறது.

மகள் அல்லது மருமகள் என ஒருவராவது தன் வீட்டில் தொட்டில் கட்டிக்கொண்டும், பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழா என்றும் பால்வாசமும் பூவாசமும் மணம் வீசிய வீட்டில் இன்று பழனியம்மாள் மட்டும் தனித்து நிற்கிறாள்.
அண்ணன் தவிக்கவிட்டு சென்றதென்பது விதி. ஆனால் அவன் மரணத்துயரத்திலிருந்து தான் மட்டும் மீண்டு வந்து அவளை மீட்காதிருப்பது தன் தவறு என உணர்ந்தாள்.ஒன்பது வயதிலிருந்து உழைத்தவள் இனி ஓய்வு எடுக்கப்போவதுமில்லை. யாருக்கும் அவள் பாரமாகவும் இருக்கப்போவதுமில்லை. இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டேயிருந்தாள் மலர்விழி

தங்கை கல்பனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு " ஏய்.. கல்பனா.. அம்மாவை போய் அடிக்கடி பாத்துட்டு வாடி.. பாவம்டீ அவ.. யார்ட்டயும் பேசாம இருந்து அவளுக்கு பேச்சு மறந்து போச்சு.. நாம தாண்டீ அவள பாத்துக்கணும்." என அரைமணி நேரம் அவளிடம் நிலைமையை சொல்லி புரியவைத்தாள்.

இப்படியாக மலர்விழியும் கல்பனாவும் அடிக்கடி சென்று அவளைப்பார்த்து வந்ததில் பழனியம்மாள் ஆறுதலடைந்தாள். அவர்கள் செல்லும்போதெல்லாம் வீட்டை சுத்தப்படுத்தி வந்தனர்.
" இப்போ உங்க அம்மா வீட்டை துடைச்சு வைக்கச்சொல்லி யாரு அழுதா? அங்க இப்போ எந்த மகாராஜா போறாரு...தேவை இல்லாத வேலையைப் பாத்துட்டு வந்து அங்க வலிக்குது இங்க வலிக்குதுனு கெடக்க வேண்டியது.." மலர்விழியின் கணவர் திட்டினார்..
"ம்மா.. ஆச்சி வீட்ட சுத்தமாவே வெச்சுருக்க மாட்டா.. அங்க போயிட்டு வந்து தும்மல் போட்டுட்டு கெடக்காதம்மா.." கல்பனாவுக்கு அவள் மகனிடமிருந்து எரிச்சலுடன் வாழ்த்துக் கிடைத்தது."
ஆனாலும்கூட அவ்ர்கள் இருவரும், மூத்த மகளும், அடிக்கடி வந்து விட்டு தான் போனார்கள். இளைய மகன் மகேஷ் கூட இப்போதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டார். இருந்தபோதும் வெங்கடேசன் மட்டும் இதில் ஈடுபாடில்லாமல் இருந்தார்..
"நான் என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளைய தேடிட்டு இருக்கேன்.. வேலையில வேற ஆயிரத்தெட்டு பிரச்சன.. இதுல இவள வேற நான் பாத்துக்கணுமா?.. அவ கிட்ட அஞ்சு நிமிஷத்துக்கு மேல என்னால பேசவும் முடியல.. பி.பி ஏறுது.. இதுல எனக்கு சுகர் பிரச்சன வேற.. சொன்னதயே சொல்லி உயிர வாங்குறா.. அவ கிட்டலாம் என்னால பேச முடியாதும்மா.." என வெங்கடேசன் தன் நிலைமையை தங்கையிடம் எடுத்து கூறினார். அதற்கு மேல் அவளும் எதுவும் சொல்லவில்லை...

ஆனால் அவர் மகள் பவித்ரா தினமும் பாட்டிக்காக குளிக்க தண்னீர் எடுத்து வைப்பது, அவள் எடுத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி தாத்தா படத்தை தொட்டு கும்பிட்டு விளக்கேற்றி வைத்து விட்டே கல்லூரிக்கு செல்வாள்.


11
இப்படியாக ஆறு மாதங்கள் கழிந்தது..
பவித்ரா தலையில் மல்லிகைப்பூவை சூட்டிகொண்டிருந்தாள்..
"பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சுருக்கு... கல்யாணத்த எப்போ வெச்சுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க.." மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொல்லவும் பவித்ரா வெட்கத்தில் சிவந்தாள்.

"அப்போ நாங்க வர்றோம்.. சீக்கிரமே ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுங்க.." என்று கூறிவிட்டு மாப்பிள்ளை வீட்டார்கள் கிளம்பிவிட்டனர்.வெங்கட் தன் மகளைபெருமிதமாக பார்த்தார்..
அடுத்த நாள் பழனியம்மாள் அடுப்பறையில் சமையல் செய்துகொண்டிருக்கும்போது வெங்கடேசன் கதவை திறந்து உள்ளே வந்தார். இந்தமுறை தனியாக அல்ல. சுண்ணாம்பு, ஒட்டடைக்குச்சியுடன் மூன்று பேர்..
"முதல்ல மாடியை க்ளீன் பண்ணிருங்க.. அப்றம் கீழ.." வெங்கட் அம்மூவரில் உயரமாக இருந்தவரைப்பார்த்து கூறினார்.
"யாருப்பா இவங்களெல்லாம்.." பழனியம்மாளின் கேள்வியை காதில் போட்டுக்கொள்ளாமல் வெங்கட் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
"ம்மா... கொஞ்சம் காபி போட்டுதர்றியா?" வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டார்.
"இந்தா போட்டுத்தர்றேன் யா.." என உடனடியாக கிளம்பினாள் பழனியம்மாள்.
"இந்தா இப்படிவந்து உட்காரு..." வழக்கமாக் இருவரும் உட்கார்ந்து காபி குடிக்குமிடத்தில் அம்மாவையும் வந்து உட்காரச் சொன்னார்.. சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் அண்ணன் இறந்த விஷயத்தை சொல்வதற்காக உட்கார்ந்தவர். இன்று தன் அன்னையின் இந்நிலயை மாற்றுவதற்காக உட்கார்ந்திருக்கிறார். ஆனால் நடந்தது வேறு..
டம்ளரில் காபியை வைத்துவிட்டு அவரருகில் உட்கார்ந்த பழனியம்மாள் அழ ஆரம்பித்தாள்.
"அண்ணனுக்கு என்னல ஆச்சு.. அவன் நம்மளல்லாம் வுட்டுட்டு போயிருக்க மாட்டான்யா.. " என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். வீட்டில் சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தவர்கள் அவரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.அவருக்கு தாயின் இச்செயலைக் கண்டு பரிதாபத்தை விட கோபமே அதிகமாக வந்தது.அவள் இன்னும் அண்ணனின் மரணத்தை மறக்கவில்லை என்பதை அவர் புரிந்துக் கொண்டார்.

"ச்சீ.. அழாத நிறுத்து..வீட்டுல கல்யாணத்த வெச்சுகிட்டு ஒப்பாரி வெச்சுட்டு திரியாத.. ரெண்டு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். இந்த வீட்டுல வெச்சுதான் நடக்கபோவுது. ஒழுங்கா அதுக்கு வேண்டிய வேலையெல்லாம் பாக்க ஆரம்பி.."கத்தினார்
வெங்கட் துன்பம் தரும் நிகழ்வுகளை நினைப்பதையே அபசகுனமாக நினைக்கும் பழக்கம் அவருக்கு எப்போதும் உண்டு. மகளின் திருமண மகிழ்ச்சியிலிருக்கும்போது மரணத்தைப் பற்றி பேசினால் பொறுத்துக்கொள்வாரா.?

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு "அப்பாடியா.. ஹா ஹா.. " என பொக்கை வாயை காட்டி சிரித்தாள். "அப்போ மளிகை ஜாமான்லாம் வாங்கி போட்டுடு.. எத்தன பேருக்கும் சோறு வடிக்கணும்?" காபி டம்ளரை எடுத்து வைத்துக்கொண்டே கேட்டாள்

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்.. அதுக்குலாம் ஆளுங்க வர்றாங்க.." முகத்தை பார்க்காமலேயே கூறினாள்.
"ஏலே.. யாரு வீட்டுல யாரு வந்து வேல பாக்குறது.. நான் பாக்காத வேலையா? " மாடிப்படியில் ஏறிக்கொண்டிருத வெங்கடேசனுக்கு பழனியம்மளின் சண்டைக்குரல் மெல்ல மெல்ல ஒலி மங்கியது.
நிச்சயதார்த்ததிற்கு முந்தைய நாள், மலர்விழி வந்தாள். குழந்தையாயிருந்த பருவம் முதல் குழந்தை பேறு பெரும் வரை தன் சுக துக்கங்கள் தெரிந்த வீடு மறுஜென்மம் எடுத்தது போல காட்சியளித்தது.

"அக்கா.. நம்ம புள்ளைங்கெல்லாம் இப்போவே படிப்பு வேலைன்னு வெளியில போயிட்டாங்க.. நாளைக்கு நாமளும் இப்படிதான் அம்மா மாதிரி தனியா கெடந்து கஷ்டப்பட்டுடுவோமோ?" கல்பனா மலர்விழியிடம் கேட்டாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நாம தான் தப்பு என்னன்னு புரிஞ்சுக்கிட்டோமே.. இனி அவ ஆயுசு இருக்குற வரைக்கும் அவளுக்கு பேச்சுதுணையா மட்டும் நாம இருக்கணும். அவ கைகால் நல்லா இருக்குற வரைக்கும் யாருக்கும் தொந்தரவு தரமாட்டா.. அதே மாதிரி யாரையும் கஷ்டப்படுத்தாம போய் சேந்துரணும்.." அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டாள் மலர்விழி.

"நாம இவ்ளோ தூரத்துல இருந்து அம்மாவ பாக்க வந்தாலும், வெங்கட் அண்ணனும் கொஞ்சம் அம்மா மேல கரிசனை காட்டலாம்.. பவித்ரா மட்டும் டேய்லி காலையில வந்துட்டு போயிட்டுருந்தா.. இப்போ அவளும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருவா.."
"அதெல்லாம் அவங்க அவங்க விருப்பம்டி.. நாம யாரையும் குத்தம் சொல்ல முடியாது.. ஒரு வாரம் எங்க வீட்டுல இருந்ததுக்கே என்ன பாடு படித்திட்டா தெரியுமா? இவ நம்ம அண்ணன் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கா.. அண்ணனையும் அண்ணியையும் என்ன பாடு படுத்தினாளோ.. பாவம் அவனே பெரிய இடத்துல சம்மந்தம் பண்ணிட்டு முழிச்சுட்டு இருக்கான், அம்மாவ பாத்துக்க வேண்டியது நம்ம கடமை.. அவன் பாத்தா பாத்துகுறான் இல்லனா போறான்.." பதிலளித்தாள் மலர்விழி.
காலியாக கிடந்த அலமாரி முழுவதும் தங்கள் உடைகளை நிறைத்து வைத்தனர் மகள்கள். மூத்த மகள் ராணி தன் பேரன்களுடன் வந்திருத்தாள்,வீடெங்கும் தோரணமும் பூ மணமும் வீச ஆரம்பித்தது. எப்போதும் போல் " சின்னக்கா.." என்று அழைக்காமல், கல்பனா "மலர்விழி அக்கா..." என்றே அழைத்தாள்.
"அம்மாவிடம் பேசுவதற்கு பொறுமை இருந்த போதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களும் எரிச்சலுடன் பேச ஆரம்பித்தனர்.. ஆனாலும் அதை பொருட்படுத்தவில்லை பழனியம்மாள். மாறாக இனம் புரியா ஆனந்தம் கொண்டாள்.


12

இன்று நிச்சயதார்த்தம்..
நாளை திருமணம்...
வெங்கட் தன் அன்னைக்கு இப்படி ஒரு மனக்குறைபாடு இருப்பதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லவில்லை. அவர்களிடம் பழனியம்மாள் அதிகமாக பேசிவிடும் வாய்ப்பும் ஏற்படவில்லை. அண்ணன் 4 வருடங்களுக்கு முன்பு காலமான செய்தி மட்டும் லேசாக அவர் காதில் போட்டு வைத்திருந்தார்.

திருமணத்திற்க்கு வந்த அனைவரும் பழனியம்மாளிடம் மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தனர்.
அவளை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருந்தது."அப்போ நான் செத்தா கூட இவ்ளோ பேரு வந்துருவாங்க போல.. என் புருஷன் சொன்ன மாதிரி நான் ராணி மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.." என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்


https://www.flickr.com/photos/nsiddharth_ind/sets/
 
பச்சைவயலில் களை எடுக்கலாம்.. பட்ட மண்ணில எடுக்கத்தான் இயலுமா? அவள் மகிழ்ச்சியுடன் இருந்தபோது,மற்றவர்களைப்போல இல்லை.. தற்போதைய அவள் மன எண்ணம் யாதெனில்,8 வருடங்களுக்கு முன்பு கடைசியாக தன் வீட்டில் நடந்த மூத்தமகனின் மகள் திருமணம்தான் இப்போது நடந்துகொண்டிருப்பதைப்போல நினைத்துக்கொண்டிருக்கிறாள். ஆம் அது தான் கடைசியாக அந்த வீட்டில் நடந்த சுபகாரியம். இன்முகத்துடன் அனைவரும் அந்த வீட்டில் உலா வருவது இப்போது தான்..

மணமகள் அறையில் பவித்ரா அலங்காரமெல்லாம் முடித்துவிட்டு கதவோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் ஓடிய இன்ப ரேகைகளை கண்சிமிட்டாது ரசித்துக்கொண்டே 5 வினாடிகள் மெய்மறந்துதான் போய்விட்டார்..
" தட்டு எடுத்துக்கோங்கோ.." ஐயர் வெங்கடிடம் கூறினார்..
இந்த இன்பம் நிலைத்திட வேண்டுமென வெங்கட் வேண்டிக்கொண்டார். தாம்பூலத்தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு "மஞ்சள் குங்குமத்துடன் நீண்ட நாட்கள் வாழட்டும்" என மனதில் வேண்டிக்கொண்டிருக்கும்போது....
"அய்யா.. வெங்கட்.. பெரியண்ணன்கிட்ட சொல்லி கல்யாண பொண்ணக் கூட்டிட்டு போக சொல்லுய்யா... மணமேடைக்கு.. நேரமாச்சு..." எனக் கத்திவிட்டாள் பழனியம்மாள். 8 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நிச்சயதார்த்தம் தான் தற்போது நடந்துக்ண்டிருக்கிறது என நினைத்ததுமட்டுமில்லாமல் பழனியம்மாள் சத்தமாக மாப்பிள்ளை வீட்டாரிடம் தாம்பூல தட்டு மாற்றும் சமயம் பார்த்து கத்திவிட்டாள்
மாப்பிள்ளையின் தகப்பனாருக்கு சுருக்கென்று ஆனது அவர் முகத்தில் நன்கு தெரிந்தது.
"என்னங்க. சம்மந்தி இது.. உங்க அம்மா என்ன அபசகுனம் மாத்ரி... இப்படியா?"
அறுவறுப்புடன் வெங்கட்டைப்பார்த்த போது வெங்கடேசனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டுதான் வந்தது.
" ஏய்.. மலரு. அம்மாவ இங்க இருந்து கூட்டிட்டு போ மொதல்ல.." கோபத்தில் அலறினார் "பைத்தியகாரி.." மனதிற்குள் புலம்பிக்கொண்டார்..
மணமகள் அறையுலிருந்து ஓடிவந்த மலர்விழி பழனியம்மாளை "ம்மா.. இங்க வாம்மா..பவித்ராக்கு ஜடைபின்னி விடும்மா.." என நாசூக்காக அழைத்துசென்றாள்.

நிச்சயதார்த்த வேலைகளெல்லாம் முடிந்த பிறகு " உங்க அம்மாவுக்கென்ன பவித்ரா மேல இவ்ளோ கோவம்.. இறந்து போனவர வந்து கூட்டிட்டு போக சொல்றாங்க.. நல்ல நேரத்துல அபசகுனமா பேசிக்கிட்டு.." சம்மந்திவீட்டார் கேட்டனர் வெங்கடேசனிடம்.
" அய்யய்யோ.. அவளுக்கு கொஞ்சம் நியாபக மறதி.. என் அண்ணனோட பொண்ணு கல்யாணத்தையும் இதயும் கொஞ்சம் குழப்பிட்டா..மத்தபடி வேற ஒண்ணுமில்லங்க.. அவளுக்கு பவித்ரா மேல ரொம்ப பிரியம்.." சமாளித்தார் வெங்கடேசன்.
"அப்படின்னா.. அவங்கள் கொஞ்சம் ஓரமா உக்கார சொல்ல வேண்டியதுதான.. சபையில உக்கார வைக்கறது அவ்ளவு நல்லா இல்ல. வாழ வேண்டிய புள்ளைங்க பாருங்க.. நாளைக்கு நடக்கப்போற கல்யாணத்துல இது மாதிரி நடக்காம பாத்துக்குவீங்கன்னு நெனைக்குறேன்." சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றுவிட்டார்..
"அப்படியெல்லாம் நடக்காதும்மா.. சொல்லிடுங்க அவர்கிட்ட" சம்மந்தியம்மாவிடம் பேசினார் வெங்கடேசன்.
"அவரு எப்பவுமே இப்படிதாங்க.. மனசுல பட்டத பட்டுன்னு சொல்லிடுவாரு.. அப்றம் பொண்ண எல்லாரும் சின்ன பழனி சின்ன பழனின்னு கிண்டலடிக்காக.. பொண்ணுக்கும் எதாவது நியாவமறதி கிறதின்னு..." இழுத்தார் சம்மந்தியம்மா..
"அய்யய்யோ.. அவளுக்கு எங்க அம்மா பேருதான் வெச்சோம்.. ஆன மரியாதைக்காக பவித்ரா அப்டின்னு கூப்ட ஆரம்ம்பிச்சுட்டோம். அதுவுமில்லாம அவ எங்க அம்மாவோட ஜாடையிலயே இருக்கா பாத்தியளா.. அதான் அப்படி சொல்லுவோம். என் பொண்ணு காலேஜ்லயே கோல்டுமெடல் வாங்கியிருக்கா.." சிரித்தபடியே பேசி கோபத்தை மறைத்தார்.
அன்று இரவு பழனியம்மால் வீட்டு மாடியிலிருந்த அறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்கவே பவித்ரா எழுந்துபோய் எட்டிபார்த்தாள்.
"எய்யா..நான் இல்லாமதான் என் பேத்தி வந்துட்டாளாய்யா?" பழனியம்மாள் குரல்.
"நீ அவ நல்லா இருக்கணும் நெனைக்குறியா இல்லயா? நாளைக்கு நீ கல்யாணத்துக்கு வந்தன்னா நடக்குறத வேற.. இப்போவே சொல்லிட்டேன்.."அப்பாவின் கோபக்குரல்
எட்டிப்பார்த்த போது பழனியம்மாளும் , வெங்கடேசனும் ஒருவரயொருவர் முறைத்துக்கொண்டு நிற்க, பக்கத்தில் மலர்விழியும், வெங்கடேசன் மனைவியும்.
"நான் ஏன்யா என் பேத்திக்கு கெட்டது நெனைக்க போறேன்.. பேத்தி கல்யாணத்த பாக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இல்ல தெரிஞ்சுக்கோ" ஆள்காட்டி விரலை ஆட்டிக்கொண்டே மிரட்டினாள் துணைக்கு சுட்டுவிரலும் எழுந்து நின்றது.

கதவருகில் நின்று பார்ப்பவளை கண்டுவிட்டாள் மலர்விழி.
"ஏய் பவித்ரா.. நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு. இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க.. போ.. இங்க உங்க அப்பா வழக்கமா போடுற சண்டய தான் போட்டுட்டு இருக்காரு.. போய் தூங்கு போ.."
அவள் கைப்பேசிக்கு மாப்பிள்ளையிடமிருந்து அழைப்பு வந்ததால் " எப்படியோ போங்க.." என்று சொல்லிவிட்டு தூங்க போய்விட்டாள் பவித்ரா.

"சும்மா கத்திட்டே இருக்காதீங்க.. நாளைக்கு உங்க அம்மா வந்தாலும் ஒரு ஓரமா நின்னுக்குவாக., நீங்க போயி தூங்குங்க.. பி.பி அதிகமாக போகுது., ரெண்டு நாளா சுகர் மாத்திர வேற சாப்டல.. " வெங்கடேசனை அவர் மனைவி இழுத்துசென்றாள்.
"நான் ஏண்டி ஓரமா நிக்கணும்?.. ஏய் மலரு உன் அண்ணி என்னடி இப்படி சொல்லிட்டு போறா?" அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள்.
"அட. விடும்மா..நீ அங்க முன்னாடி வந்து நின்னுட்டு எதாச்சும் பேசிட்டு கெடக்காத.. மாப்பிள்ள வீட்டுலதான் கோபபடுறாகள்ல.." தன் கணவனுக்கும் மகனுக்கும் கொசுவர்த்தி பொறுத்தி வைத்துக்கொண்டே பேசினாள் மலர்விழி.
"மனச வேதன பட வைக்காண்டி உங்க அண்ணன்.. அன்னைக்கு இப்படித்தான்..." அவள் சொல்லிகொண்டிருக்கும்போதே மலர்விழியின் மகன் வேலன் "ஆச்சி கத பேசிட்டே இருக்காத.. அப்பா தூங்கட்டும்" என அந்த அறையின் கதவைச் சாத்தினான்.

பிள்ளைகளும் பேரன் பேத்தியும் வந்திருப்பதனால் 10 வருடங்களுக்கு முந்தைய பழனியம்மாவாய் இருந்தவள் நொடிப்பொழுதினில் தன் உண்மை நிலையையயும் தனிமையையும் உணர்ந்து கொண்டாள். அவள் பிள்ளைகள் தங்கள் கணவன் மனைவி மீது பாசம் கொண்டு இவளை ஒதுக்கி வைப்பது புதிதல்ல.எப்போது நடப்பதுதான். அந்த தருணங்களில் கொஞ்சிக்கொண்டிருக்கும் பேரன் பேத்தியும் கூட இப்போது பெரியவர்களாகி தன்னை ஒதுக்கிவைப்பது தான் புதிதான கஷ்டமாக இருந்தது.
காலையில் அந்த அறையிலிருந்து அவள் சென்றுவிட்டாள். ஆனால் அவள் விட்டுச்சென்ற கண்ணீர் அங்கேயே இருந்தது.


13

"முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடுத்து.. பொண்ண அழைச்சுட்டு வாங்கோ.." ஐயர் அழைக்கவும் ராமபிரானின் கழுத்தில் மாலை சூடும் சீதாபிராட்டியாக வந்து நின்றாள் பவித்ரா.
மாப்பிள்ளை அவள் கழுத்தில் தாலிக்கட்டி குங்குமிடும்போது வெங்கடேசன் ஆனந்தகண்ணீரை அவர் தோளில் இருந்த துண்டில் துடைத்து கொண்டார்.
"தீர்க்க சுமங்கலியா இரும்மா.." வெங்கடேசனும் அவர் மனைவியும் தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மணமக்களை வாழ்த்தினர். சம்மந்தி வீட்டாரிடம் அவர்கள் ஆசீர்வாதம் வாங்கியபோது வெங்கடேசனும் அவர் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பார்வையாலேயே இன்பங்களை பகிர்ந்துகொண்டனர்.

பவித்ரா சுற்றி முற்றுலும் பாட்டியை தேடும்போதும்,மாப்பிள்ளையின் தாய்மாமனார், பெண்ணின் தாய் மாமனார் என மணமக்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களிடம் மாலையும் கழுத்துமாக ஆசீர்வாதம் வாங்கும்போது கூட வெங்கடேசனுக்கு அவர் அன்னையின் எண்ணம் வரவில்லை.
உறவுக்காரரில்லை என்றபோதும் கூட ஊரில் யாருக்கு திருமணம் என்றால் அவர்களை அழைத்து "தாத்தாவ கும்டுக்கோ.." என்று கூறி நூறு ரூபாயை கொடுக்கும் பழனியம்மாள் அவளை யாராவது அழைக்க மாட்டார்களா என ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தாள்.
மணமக்களை மாப்பிள்ளையின் நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்துகொள்ளவே, இனி யாரும் தன்னை அழைக்கப்போவதில்லை என் எண்ணிக்கொண்டு கையில் வைத்திருந்த நூறுரூபாய் நோட்டை தன் புடவை முந்தியில் முடிந்து வைத்துக்கொண்டு மணமேடையிலிருந்து தன் பார்வையை அங்குமிமாக செலுத்தி தன் கண்னீரை மறைத்துக்கொண்டாள்.
கை கட்டிக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தவளை அருகிலிருந்த மாப்பிள்ளை வீட்டுக்கார பெண் தொடையில் தட்டி, மணமேடையை பார்க்கும்படி கையை நீட்டினாள். அவள் பார்க்கும்போது மணமகன் கையை நீட்டி அவளை அழைத்தார். அவர் தந்தை "டேய்.. வேணாண்டா.." என மெதுவாக அவர் காதில் சொல்லவும் "ப்பா.. நல்லா வாழ்ந்தவங்கப்பா.. இவங்க ஆசீர்வாதம் இல்லன்னா, எப்படிப்பா.." என கூறிவிட்டு, திரும்பும்போது பழனியம்மாள் அவர்கள் முன்பு வந்து நின்றிருந்தாள்.
இருவரும் அவள் காலில் விழவும் ,"நல்லா இருங்க என் தங்கங்களா.." இந்தா என புடவை முடிப்பை அவிழ்த்து நூறுரூபாய் கொடுத்தாள்.
"இந்த பழனியம்மா இன்னும் இந்த நூறுரூவா குடுக்குற பழக்கத்த விடலயாக்கும்.." மண்டபத்தில் ஒரு கிழவி கிண்டலடித்தது அவள் காதில் விழுந்தது.
"இந்தா புடிய்யா.. மாப்பிள்ளை வீட்டுல நல்ல பேரு எடுக்கணும்டி என் ராஜாத்தி.." என ஆசீர்வாதம் வழங்கினாள். மாப்பிள்ளையின் அப்பா கோபத்துடன் தன் மகனைப்பார்த்து முறைத்துகொண்டிருந்தார்.. வெங்கடேசன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தார்.

"சரி.. சரி.. பொண்ணு மாப்பிள்ளை சாப்ட போகட்டும் விடுங்க.. ஏய் மலரு... அம்மாவ அந்த பக்கமா கூட்டிட்டு போயிடு.. பொண்ணு மாப்பிள்ள பக்கத்துல வந்து எதாச்சும் சொல்லிட்டு இருக்கபோறா.. சம்மந்தி முகமே சரி இல்ல.." என மலர் விழியின் காதில் முணுமுணுத்தார்..

சாப்பிடபோகும்போது பவித்ரா தன் இளம்கணவனின் காதில் "தாங்க்ஸ் டா.." என கிசுகிசுத்தாள்."நீ நேத்து நைட்டு போன்ல சொல்லாட்டியும் நான் பாட்டிய கூப்ட்டு ஆசீர்வாதம் வாங்கியிருப்பேன் டி...." என்றார் மாப்பிள்ளை கண்களில் காதல் வழிய..
அன்று மாலை..
மெகந்தி இட்ட கரங்களில் வளையல் ஓசை குலுங்க குலுங்க பவித்ரா கைகுட்டையால் மூக்கையும் கண்ணையும் மாறிமாறி துடைத்துகொண்டிருந்தாள்.
" பாத்து நடந்துக்கோம்மா.. பொறுமையா இருக்கணும். இனி அவங்கதான் உன் அம்மா, அப்பா.." மலர்விழியும் கல்பனாவும் கண்ணீரைத்துடைத்துக்கொண்டே அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். "சரி அத்த.. அப்பாகிட்ட அடிக்கடி பேசிட்டே இருங்க.. அவருதான் பாவம்.." கண்ணீர் இன்னும் நிற்கவில்லை..

அடுப்பாங்கறையிலிருந்து அவள் வீடுவாசலுக்கு வரும்போது அப்பாவைப்பார்த்து அழுகையை அடக்க முடியாமல் அவர் மார்பில் சாய்ந்து அழுதுவிட்டாள். அவரும் கண்ணீரை அடக்கிப்பார்த்தார். முடியவில்லை.. பொல்லாத கௌரவம். என மகளை விடவா என அவரும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
"அம்மாவ விட அவ அப்பாகிட்ட தான் ரொம்ப பாசமா இருப்பா.. அவுகளுக்கும் பவித்ரா மேல அவ்ளோ பிரியம்.." மாப்பிள்ளையிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் கல்பனா.
"ஒழுங்கா மாத்திர சாப்டுங்கப்பா.. பாட்டிக்கிட்ட சண்ட போடாதீங்க.. அவ பாவம். அவளுக்கு நாம தான்ப்பா எல்லாமே.." அவள் அழுது நிமிரும்போது,மாப்பிள்ளை அவள் நெற்றியில் இட்ட குங்குமம் "என்னவள் இனி உனக்கு இல்லை.." என அவரது சட்டைப்பையினுள் இருக்கும் இதயத்திடம் சொன்னதாய் உணர்ந்தாள்
"மாப்பிள்ளைக்கு நான் தான் காபி குடுப்பேன்.." பழனியம்மாள் ஓடி வந்து மாப்பிள்ளையிடம் குடுத்தாள்.. "பாட்டி.. எங்க வீட்டுக்கு நீயும் வர்றியா?"
மாப்பிள்ளை பழனியம்மாளிடம் கேட்டார். " .. வாரேன்யா.. அங்க வந்து நான் தான் காபி போட்டுத்தருவேன்.. ஹா ஹா.." என வாயைத்திறந்து சிரிக்க, மாப்பிள்ளையின் அப்பா ஏதோ முணுமுணுக்க கல்பனா பழனியம்மாளை உள்ளே இழுத்து சென்றாள்
பவித்ரா வண்டியினுள் ஏறியதும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். வாசலில் நின்றபடியே கைஅசைத்துக் கொண்டிருந்த வெங்கடேசன் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்ததும் வண்டி கிளம்பியது.
தெரு முனை வரை கைஅசைத்து அழுதுகொண்டிருந்த பவித்ரா தெருவை தாண்டியதும் தன் கணவன் முகத்தைப்பார்த்தாள். அவர் "உய்ய்ய்ய்.. ம்மம்ம்ம்ம்மீஈஈஈஈ.." என குழந்தைபோல் முகத்தை வைத்து அவளை கிண்டல் செய்யவும் சிரித்துக்கொண்டே அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். இனி அவள் இல்லற வாழ்வு இனிதே ஆரம்பம்தான்
https://www.flickr.com/photos/nsiddharth_ind/sets/



14

வீட்டிற்கு வந்த உறவினர்களெல்லாம் அன்றிரவே கிளம்பி சென்றனர்.
அடுத்த நாள் காலையில் வெங்கடேசன் பழனியம்மாள் வீட்டிற்கு காலையிலேயே வந்தார். கல்பனாவும், மலர்விழியும் அப்போது தான் பல்தேய்த்துக்கொண்டிருந்தனர். பழனியம்மாள் "இரு. இன்னும் காபி போடல." என்று அடுப்பு பக்கத்தில் சென்றாள்

" உன் காபியை கொண்டு குப்பையில் போடு..உனக்கென்ன அப்படியா நியாவமறதி வருது. தாம்பூலம் மாத்தும்போது உனக்கென்ன அங்க வேல.. பேசாம ஓரமா கெடக்குறதுக்கு இல்லாம.. உங்க ரெண்டு பேரு பேச்சையும் கேட்டு இவள நடுவுல வெச்சு பேசுனேன் பாரு.. என்னை தான் சொல்லணும்." என கோபத்தில் எல்லாரிடமும் கத்தினார்.

"விடுண்ணே.. அவ இவ்ளோ நாளா தனியா இருக்குறா.. நாலு பேர பாத்தா நல்லா பேசுவான்னு தான் பாத்தேன்.. முன்னாடிய விட இப்போ இவ கொஞ்சம் நல்லா பேசிட்டுதான் இருக்கா.." கல்பனா பொறுமையான குரலில் தன் அண்ணனின் கோபத்தை சாந்தப்படுத்தினாள்.

" இனிமேல் இவ பேசி என்னப்பண்ணபோறா.. ஊமையா இருந்துட்டா கூட பிரச்சன இல்ல.. இப்படியா அவசகுனமா பேசுறது? அப்படி என்ன? ஒரு புள்ள செத்தது கூட நினப்பு இல்லாம கல்லு மாதிரி இருந்து நம்ம உயிர வாங்குறா பாரு..இவ கூட சவகாசம் வெச்சுகிட்டா என் பொண்ணு வாழ்க்கைதான் பரிதாபம் ஆகும்.. என சம்மந்தாருக்கு இவ மேல அவ்ளோ கோபம். நல்ல நேரத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம,. பைத்தியகாரி.."என பேசிக் கொண்டிருக்கும்போதே வியர்த்தது.
"போ.. சும்மா.. எப்போ பாரு டென்ஷனாகி கத்திகிட்டு..போய் வேலய பாருண்ணே.." அழைத்து சென்றாள் மலர்விழி.
இரண்டு நாட்கள் கழித்து மல்ர்விழியும் , கல்பனாவும் குடும்பத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்பி சென்றனர். வாசலில் காய்ந்த தோரணங்கள் கல்யாணத்திற்கு வாங்கிய பலகாரங்கள் என அத்தனையையும் சுத்தம் செய்து விட்டு கிளம்பினர்.
மீண்டும் அதே தனிமை. அவள் வேலைகளை அவளாக பார்த்துக்கொண்டு, மதிய நேரம் உறங்கிவிட்டு, டிவி பார்த்துக்கொண்டு என மூன்று நாட்கள் சென்றது. இப்போது இன்னொரு புதிய வேலை.. காலையில் காபி போட்டு வைத்து வெங்கடேசனுக்காக காத்துக்கொண்டிருப்பது.ஆனால் அவர் வீட்டிற்கு வரவே இல்லை.

திருமணம் முடிந்து ஒரு வாரம் வரைக்கும் திருமணவேலையால் வெங்கடேசனுக்கு நாட்கள் சென்றதே தெரியவில்லை. எட்டாம் நாள் மாலையில் வீட்டிற்கு வந்ததும் "ம்மா.. பவித்ரா.. அப்பாக்கு தண்ணி கொண்டாம்மா.." என அழைத்தார். அவர் மனைவி அவரை மூன்று வினாடிகளுக்கும் மேல் பார்த்துக்கொண்டேயிருக்கும்போது தான் புரிய வந்தது பவித்ரா வீட்டில் இல்லை என்பது. தன்னைத் தானே பார்த்து சிரித்துக்கொண்டார்.

அவள் இல்லாமல் வீடு அமைதியாகத்தான் இருந்தது. எப்போது கிரியுடன் சண்டையிட்டுக்கொண்டு கலகலவென இருப்பாள். கிரி வேலைப்பார்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றபோது கூட வீடு இத்தனை அமைதியாய் இல்லை. அவள் கொலுசு சத்தமும் வளையல் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
"ஏய்.. வீட்ட ஏண்டி மங்கலா வெச்சுருக்க.. லைட்டைப் போடு டி.." மனைவியிடம் கூறினார்.
"பித்து பிடிச்சுபோச்சா? ரெண்டு லைட்டும் எரியதானே செய்யுது.." பதில் சற்று கோபம் கலந்த குரலுடன் வந்தது. மகள் இல்லாமல் வீடு இருட்டாய் இருந்தது. இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது "பவித்ரா... அப்பா வண்டி சாவியை எடுத்துக் குடும்மா.." என கத்தி அழைத்துவிட்டார்.
படக் என எழுந்து "என்னங்க.. ஏன் இப்படி கத்துறீக? என்னாச்சு?" என கேட்டாள்.
"ஒண்ணுமில்லடி.. தூக்கத்துல பொலம்பிட்டேன்.."
" கொறட்ட பிரச்சனையே தீரல.. இதுல பொலம்பல் வேறயா?.." எனக் கூறிவிட்டு அவருக்குதெரியாமல் அழுத கண்ணீரை துடைத்துக்கொண்டாள்..

அடுத்து ஒரு வாரமும் கழிந்தது..
பழனியம்மாளுக்கு காபி போட்டுவைத்துவிட்டு காத்துக்கொண்டிருப்பது இப்போது ஒரு வழக்கமானது. மகனுடைய காபியை டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டு தன்னுடைய பங்கு காபியை மட்டும் அதே சமையலறை வாசற்படியில் வைத்து குடித்துக்கொண்டிருந்தாள்

வெங்கட்டும் அவர் மனைவியும் மகளைப்பார்ப்பதற்காக சென்றனர்.
"யேய்.. சீக்கிரம் தண்ணி கொண்டுவாடி.. " அதட்டலாக கூறினார் பவித்ராவின் கணவர். எவனோ ஒருவன் தன்மகளைப் பார்த்து 'டி' என அழைத்ததும் ஒரு நொடியில் வெங்கடேசனுக்கு ஆத்திரம்தான் வந்தது. செம்பில் தண்ணீர் கொண்டு வந்த பவித்ரா மலர்ந்த முகத்துடன் வரும்போது அந்த ஆத்திரம் ஆனந்தமாக மாறியது. செம்பை வாங்கும் சாக்கில் பவித்ராவின் கணவர் அவள் கையை கிள்ளிவிட்டதைப் பார்த்து நாகரீகமாக திரும்பிக்கொண்டார் வெங்கடேசன்.
தூரத்தில் இருந்து இத்தனையையும் ரசித்துக் கொண்டிருந்த வெங்கடேசன் தன் மகளுக்கு தான் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக்கொண்டார்.
"அப்பா.. அம்மா இங்க ரெண்டு நாள் இருக்கட்டும்ப்பா.. " என மகள் கெஞ்சிக்கேட்டதன் பின்னும் மறுவார்த்தை வருமா? " இவள நீயே வெச்சுகிட்டாலும் சரிதான்மா?.. ஹா ஹாஹ்ஹ்ஹா" எனகணீர் குரலில் சிரித்துவிட்டு வெங்கட் மட்டும் வீட்டிற்கு கிளம்பினார்.
"வாங்க மாமா.. வண்டியில கொண்டுபோய் உங்கள ட்ராப் பண்ணிட்றேன்.. யேய்.. பவித்ரா..வண்டி சாவியை எடுத்துட்டு வாடி.." மறுபடியும் அவருக்கு அதே கோபம். தன்னுடைய பாசத்தை யாரோ பறித்துவிட்டதுபோல தோன்றியது அவருக்கு. "இனி யார் மீது இத்தனை அன்பு வரும் எனக்கு?" என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
"ஏங்க..மாத்திரைய கரெக்டா சாப்ட்ருங்க.சாயந்திரம் வீட்டுல வெளக்கு ஏத்தி வைங்க.போயிட்டு போன் பண்ணுங்க.. நான் நாளக்கழிச்சு வந்துருவேன். பாத்து பத்திரமா போயிட்டு வாங்க" தனக்காக தன் மனைவி என்ற ஒரு ஜீவன் இருப்பது அப்போது தான் தெரிய வந்தது.
வெங்கடேசனுக்கு தன் மனைவியை விட மகளின் மீது அன்பு அதிகம். வெளியில் கிளம்பும்போது தன் மகள் கையால் வண்டி சாவி வாங்குவதை அதிர்ஷ்டமாக எண்ணுவார். அவர் மனைவி கூட அவரிடம் இதற்காக சண்டையிடுவதுண்டு.
"இப்படி பாசத்த காட்டுறது நல்லா இல்ல. ஒருநாள் நீ உன் புருஷன் வீட்டுக்கு போக போற. அப்போதான் தெரியும் உங்க அப்பாவுக்கு என் அருமை."
"எனக்கு எங்க அப்பா தான் முக்கியம். போடா டேய்னு நான் புருஷன்கிட்ட சொல்லுவேன்." என அப்பா தோளில் சாய்ந்துகொண்டே பவித்ரா சொல்லும்போதெல்லாம் அவருக்கு பெருமிதமாக இருந்தது.
மாலையில் வீட்டிற்கு வரும்வழியில் பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டு சென்றான் ஒரு சிறுவன். இரண்டு மாதங்களாக அவனை அந்த தெருவில் காணவில்லை. இன்று அவனைப்பார்த்த சந்தோஷத்தில் அவனருகே சென்று பஞ்சு மிட்டாய் வாங்கிக்கொண்டார். அதை தன் பையில் வைத்து வீட்டிற்கு செல்லும்போதுதான் மகள் வீட்டில் இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

இந்த விஷயத்தை அவருக்கு தன் மகளிடம் சொல்லவேண்டும் என தோன்றியது அவருக்கு ……அவளுடைய மகளுக்கு கால் செய்தார். "ப்பா.. நான் எங்க மாமாவுக்கு காபி போட்டுட்டு இருக்கேன்பா.. அப்றமா பேசுறேன். பீம் பீம்" தொடர்பு துண்டிக்கப் பட்டபோது அவள் கையால் செய்து தரும் ஏலக்காய் டீயை சாப்பிட வேண்டுமெனத் தோன்றியது அவருக்கு .
அவர் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
"ம்.. என்ன?"
"போயிட்டு போன் பண்ண சொன்னேனே. மறந்துட்டீகளா?"
"ஆமா.."
"அப்போ உங்க மகளுக்கு மட்டும் போன் பண்ண நியாபகம் இருந்துச்சாக்கும்.."
"அதான் வந்துட்டேன்ல.. வை" எரிச்சலை மனைவி மீது காட்டினார்.
மறுபடியும் மனைவியிடமிருந்து அழைப்பு வந்ததும் கோபத்துடன் "அலோ.." என கத்தினார். "அப்பா.. என்னப்பா.. எதோ சொல்ல வந்தீங்களே.. "
"ஒண்ணுமில்லடா பவிக்குட்டி.. அப்பா உன்கிட்ட ஒரு காமெடி சொல்லணும்.. இன்னைக்கு வீட்டுக்கு வரும்போது.."
"அப்பா.. அவரு கூப்டுறாரு.. நீங்க அம்மாகிட்ட பேசிட்டு இருங்க.. நான் வந்து பேசுறேன்.." அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஓடினாள் கணவனைத் தேடி.
…"இரும்மா.. நான் சொல்லி முடிச்சுட்றேன்.."
"என்னங்க சொல்ல போறீக... ?" மனைவியின் குரல் கேட்டது.
"போ.. அவ வந்ததும் அவள பேசச்சொல்லு.." போனைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.. இன்னும் அழைப்பு வரவில்லை. அவள் அடுப்பறையில் பூரி சுட்டுக் கொண்டு இருந்தாள்
அவராகவே அழைத்தார்.
…"அப்பா.. பூரி சுட்டுட்டு இருக்கேன்பா.. " அப்றமா பேசுறேன்.
"சரிடா.." கட் செய்ததும் தன் மகள் இத்தனை வேலைகளையும் பார்க்கிறாளே என்று கலங்கினார்.இனி அவளை தொந்தரவு செய்யவேண்டாம் காலையில் பேசிக்கொள்ளலாம் என நினைத்து அவளிடம் குட்நைட் மட்டும் சொல்லிவிட்டு உறங்கிவிடலாம் என கால் செய்தார்.
பவித்ரா பூரி செய்து கொண்டிருக்கஅடுப்பறையில் அவள் மாமியார் அருகில் எதயோ தேடிக்கொண்டிருந்தார்.மொபைல் போனில் மறுபடியும் அழைப்பு வந்ததும் யாராயிருக்கும் என எட்டிப்பார்க்கையில் பூரியை கை தவறி எண்ணெய் பாத்திரத்தில 'சட்' என போட்டுவிட்டாள். எண்ணெய் சட்டியிலிருந்து இரண்டு துளி எண்ணெய் அவள் மாமியார் மீது தெளித்தது.
"ஸ்ஸ்ஸ்.. அப்பா... பாத்து சமையல் செய்ய மாட்டியா?? என்னதான் கத்துக்குடுத்தாங்களோ உங்க வீட்டுல.. " என திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து அவள் வீட்டின் வரவேற்பறைக்குச் சென்று விட்டார். ஆனாலும் மொபைல் ரிங்டோன் நிற்கவில்லை.
கோபத்தில் போனை எடுத்து..
"அப்பா..இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சன..? நான் தான் அப்றம் பேசுறேன்னு சொன்னேன்ல.. வைங்க.. நான் காலையில் பேசுறேன்.." …எண்ணையில் போட்ட கடுகு போல பொறிந்தாள்.பதிலை எதிர்பார்க்காமல் கட் செய்துவிட்டாள்.
வெங்கடேசனின் மனநிலையை இப்போது சொல்லவா வேண்டும்.?
தனித்து விடப்பட்டது போல உணர்ந்தார். இதுவரை தன் மகள் கோபத்தை தன் மீது காட்டியது இல்லை. திருமணமான புதிதில் புது மாப்பிள்ளை என்கிற பெயரில் தன் மாமனாரை இவர் கஷ்டப்படுத்தியதன் பலனை இப்போது அனுபவிப்பதாக நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டார்.
வீட்டில் அவர் மனைவியும் இல்லாதது அவருக்கு ரணத்தைத் தந்தது.தன் மனைவியின் அருமையை புரிந்துகொண்டார். இரவு முழுவதும் தன் மகளையும் மனைவியையும் எண்ணி உறக்கதைத் தொலைத்தார். 3மணியளவில் அவரது பயண அலுப்பு அவரை உறக்கத்திற்கு குண்டுகட்டாக தூக்கிச்சென்றது. காலையில் விழித்தபோது படுக்கையின் அருகே எறும்பு கூட்டங்கள் பஞ்சுமிட்டாயை ஏற்றுமதி இறக்குமதி செய்து கொண்டிருந்தன.
காலையில் 8 மணிக்கு..
மெயின் கேட்டின் இடுக்குகளில் பால் பாக்கெட்டும், நாளிதழ்களும் உள்ளே அழைத்துப் போக சொல்லி கெஞ்சின. அதயெல்லாம் கண்டுகொள்ளாமல் வெகுநேரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்த வெங்கடேசன் அதற்கு விடைக்கிடைத்தாற் போல சட்டென வெளியே கிளம்பினார்.
பழனியம்மாளின் வீட்டிற்கு வழக்கம்போல காபி குடிக்க சென்றார். கதவை திறக்கும்போது பழனியம்மாளின் பேச்சு சத்தம் கேட்டது. யாருடன் பேசுகிறாள் என்று பார்த்தபோது அவள் சமயலறையின் வாசலில் உட்கார்ந்து தனியாக புலம்பிக்கொண்டிருந்தாள்.
"நம்மளாலயே இவ கூட பேசமுடியாதே..இவ கூட யாரு இந்நேரத்துல பேசிட்டு இருக்குறது?" மனதிற்குள் கேட்டுக்கொண்டே உள்ளே சென்று பார்த்தார். இன்னுமொரு டம்ளரின் இருந்த காபி, பவித்ராவிற்காக அவர் வாங்கி வைத்த பஞ்சு மிட்டாயை நினைவூட்டியது.

இத்தனை நாட்களும் அவர் தினமும் வந்துகொண்டிருப்பதைப்போல "இந்தா குடி.. ஆறிப்போச்சு பாரு.. குடு.. சூடு பண்ணித் தர்றேன்.." என எடுத்துச் சென்றாள். அவளின் மனநிலையும் மனவியாதியும் அவருக்கு இப்போது புரிந்தது.வீடு பளிச்சென இருந்தது அவருக்கு புது மாற்றத்தைத் தெரிவித்தது. சுற்றி முற்றிலும் பார்த்து சுவர்களுடன் தன் இன்பத்தை பகிர்ந்து கொண்டார். விளக்குக்கு மேலிருக்கு தன் தந்தையின் படத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து தான் படும் வேதனையைப் பற்றி யோசித்தார் .அப்போது அங்கிருந்த உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயை பார்த்ததும் அவருக்கு உச்சந்தலை வரை கோபத்தை ஏற்படுத்தியது.
"இந்தாய்யா.. குடி.." அவள் சூடான காபியை நீட்டும்போது
"அறிவிருக்கா உனக்கு..?கஷ்டப்பட்டு செலவு பண்ணி வீட்டை பெயிண்ட் அடிச்சு வெச்சா தெருவுல கெடக்குற தரித்தரத்தையெல்லாம் வீட்டுல கொண்டாந்து வைக்குறியா?"" என சூடான கோபத்தை காட்டினார்.
பொக்கை வாயைப்பொத்தியவாறே திருதிருவென முழித்த பழனியம்மாளைப் பார்க்கையில்நேற்று இரவு அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டம் நினைவுக்கு வந்தது.திருமண வைபோகம் செங்கலால் கட்டப்பட்ட வீட்டிற்கு மட்டுமே நிரந்தரமான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என உணர்ந்தார்.அன்பும் அரவணைப்பும் மட்டுமே மனித மனங்களை மாற்றும் என உணர்ந்தார்.
வெங்கடேசன் வழக்கம் போல அவளுடன் கதையடித்துக்கொண்டு காபிகுடிக்க ஆரம்பித்தார்.இப்போது மாலையிலும் கூட வரும்போது பருப்புவடை வாங்கி வந்து இருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தனர். புதிய முதுமையின் தனிமை, பழைய முதுமையின் தனிமைக்கு துணையானது. 


 

 



No comments:

Post a Comment