Sunday 22 November 2015

U TURN





"you... Son of a Bi**.. டேய்.. horn அடிச்சுட்டு வர வேண்டியது தானடா?"  U Turn ல் திரும்பிய போது சட்டென எதிரில் மோதியவனைப் பார்த்து சீறினான் ஸ்ரீராம்


"ஏண்டா அறிவு கெட்ட முண்டம்..எப்படி டா  சைக்கிள்ல horn அடிக்க  முடியும்?"

"ooh...  shit.." காரை மறுபடியும்  start செய்தான்.

"ஙொய்யாலே.. வருதுங்க பாரு. ஊட்ல பொன்டாட்டி மேல கீர கோவத்தயெல்லாம் நம்மாண்ட வந்து காட்ட வேன்டியது"


"பொண்டாட்டி.. அவளால தான் எவ்ளோ பிரச்சன.. இன்னைக்கு மீட்டிங்க்கு போறேன்னு தெரிஞ்சும் ம்ச்ச்.. காலையில  இருந்து இன்னைக்கு எதுவுமே உருப்படல.Alarm அடிக்க வேண்டிய phone கீழ விழுந்து ரெண்டா உடஞ்சு  switch off. Shoe க்குள்ள இருக்க வேண்டிய socks மழைல நனைஞ்சு கெடக்குது.பையன் குடிக்க வேண்டிய பால் என் ஷர்ட்ல கொட்டிடுச்சு.இவ்ளோ பிரச்சனைக்கு அப்றம் மீட்டிங்க்கு போனா ஆபீஸ்ல குடுக்க  வேண்டிய document  வீட்ல.அந்த   manager மாங்கா மடையன் கடுப்பேதிக்கிட்டு இருக்கான் .. shit.. அங்க அங்க U Turn. இதுல ambulance வேறயா?.நை நைனு.பொறுங்கடா  டேய்ய்.. .. நீங்க தலைவலி மயக்கத்துக்கெல்லாம்  ambulance வைப்பீங்க.நாங்க வேலைய விட்டுட்டு உங்களுக்கு வழிய வேற விடணுமா? பொறுங்கடா டேய்ய்.சைரன் மண்டை வண்டிக்காரனுகளா.. தன் தெருவிற்குள் நுழையும் வரை அவனது மனம் இவ்வளவு பேச்சையும் பேசிவிட்டு இடையிடையே டாக்குமென்ட்டையும் தன் டார்லிங் கயல்விழியையும் நினைத்துக்கொண்டு தான் இருந்தது.


"பால் கொட்டுனதுக்கு கொஞ்சம் ஓவராதான் பேசிட்டேனோ?..உன்னால என் வாழ்க்கையே போச்சு. போயிடுன்னுலாம். சே. நான் அவ்ளோ கத்தினப்போ கூட ஒரு வார்த்தை எதிர்த்து பேசல. போய் செல்லத்த கூல் பண்ணனும்."


கார் உள்ளே நுழையும்போது வாச்மேன் அவன் கார் அருகே ஓடிவந்து "சார்.. என்னாச்சு சார் உங்க போனுக்கு? மேடம் அந்த ஆம்புலன்ஸ்ல  தான் போயிட்டு இருக்காங்க. இப்போ போனா புடிச்சுடலாம்."என் கூற நொடியும் தாமதிக்கவில்லை.மருத்துவமனையின் பெயர் அந்த ஆம்புலன்ஸில் பொறிக்கப்பட்டிருந்தது அவன் நினைவுக்கு வரவே விரைந்து சென்றான். 


வரவேற்பறையில் மூச்சைப்பிடித்துக்கொண்டு..

"வெளில நிக்குதே இந்த ஆம்புலன்ஸ்ல வந்தவங்க.."
"அதோ அந்த ICU வார்ட்ல தான் சார்.
 நீங்க தான் பேஷண்டோட husbandடா?
உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க நேரா பொயி லெப்ட்ல செகண்ட் ரூம்."

பயந்து கொண்டே அங்கு சென்று பார்த்த போது எல்லோரும் பரபரப்பாக இருக்க  ஸ்ட்ரெட்சரோடு ஒரு பெண்ணை உள்ளே அழைத்து சென்றனர். 


உள்ளே நுழைய இருந்த டாக்டரிடம் சென்று "டாக்டர்.." என்றான் 


"என்ன சார்!! நீங்க தான் பேஷண்டோட கஸ்பண்டா?கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா?இப்பொ critical condition ஆயிடுச்சு.இதுல கையெழுத்து போடுங்க. கடவுள வேண்டிக்கோங்க".கை நடுங்க கையெழுத்து போட்டதும் கண்கள் இருண்டு கொண்டு வந்தன."கயல்.. என்னை விட்டுட்டு போயிடாதம்மா.." என அழ ஆரம்பித்து விட்டான்.


வரவேற்பறையிலிருந்து  மற்றொரு பெண் வேகமாக ஓடி வந்து அவன் முன்பு நின்றாள். "ராம்.. நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு காயத்ரியோட husband  கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறார்.அவளுக்கு வேற  pain அதிகமாயிடுச்சு.இப்போ என்னப் ..." அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். 


"தலைவலியோ  தலைப்பிரசவமோ..வலி வன்டிக்குள்ள இருக்குறவனுக்குத்தான் தெரியும்.நீங்க கொஞ்சம் வழி விட்டுருக்கலாம்". கணவனை நன்கு புரிந்திருந்த கயல் பொறுமையாக கூறினாள். 



Friday 10 April 2015

5000(0)




காலை 11 மணிக்கு..
   
துபாயிலிருந்து கணவன் அனுப்பிய 50000ஐ ATMஇல்இருந்து எடுத்துவிட்டு காரில் வந்து அமர்ந்தாள் ரேவதி. காரின் பின்னிருக்கையில் இருந்த மாணிக்கம் கத்தியை அவள் கழுத்தில் வைத்தான். "ஒழுங்கா கையிலிருக்குற பணத்தைக் குடுத்துடு". உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கையிலிருந்த பணத்தை அவன் கையில் கொடுத்துவிட்டாள். முதல்முறை செய்த திருட்டு முழு வெற்றி அடைந்த சந்தோஷத்தில், இனி திருடிதான் பிழைக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டான் அநாதை சிறுவன் மாணிக்கம்.

மதியம்  3 மணிக்கு.. 
      
  "உன் பொண்ணோட கால் அடிபட்டதுக்காக என் பையன் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணுமா? சான்ஸே இல்ல. நான் குடுக்குற டொனேஷன் மணிய வெச்சுதான்யா உன் பொண்ணு படிக்குற காலேஜே ஓடுது. என் பையன் கார் ஓட்டுற ஸ்பீடுக்கு உன் பொண்ணு உடம்புல உயிர் மிஞ்சுனதே பெருசுன்னு நெனைச்சு சந்தோஷப்பட்டுக்கோய்யா..." வைர வளையல் அணிந்திருந்த கையால் சொடுக்கு போட்டு தன் பி.ஏ வை அழைத்தாள் ரேவதி. "யோவ்..சிதம்பரம்.. இவன் மூஞ்சியில 50000ஐ விட்டு வீசுங்க. அஃப்ட்ரால் ஒரு கவர்மென்ட் ஸ்கூல் வாத்தியார்.இவன்கிட்ட கோடீஸ்வரியோட பையன் மன்னிப்பு கேக்கணுமா??" என கேட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள் ரேவதி. அன்று முதல் பணக்காரர்களை வெறுக்க ஆரம்பித்தார் அருணாசலம். தன் குழந்தைகளையும் பணக்காரர்களுடன் பழகாமல் பார்த்துகொண்டார். 


இரவு 9 மணிக்கு..
   
       "டாக்டர்.. நீங்க தான் டாக்டர் எப்படியாச்சும் என் மனைவியை காப்பாத்தணும் ப்ளீஸ்.." அவசர அவசரமாக விபத்தில் காயமடைந்த தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான் ஷிவா. "ஓகே.. கூல்ல்.. கூல்ல்.. நர்ஸ்.. இவங்கள ஆப்பரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போங்க.. ஷிவா.. நீங்க ரிஸப்ஷன்ல 50000 பணம் கட்டிடுங்க." என ஸ்டெத்தஸ்கோப்பை கையில் எடுத்துக் கொண்டு மதுவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரேவதி. அரை மணி நேரம் கழித்து. "ஸாரி ஷிவா.. நாங்க எவ்வளவோ போராடியும் உங்க மனைவியை காப்பாத்த முடியல.." என ஷிவாவிடம் கூறிவிட்டு ரேவதி சென்றுவிட்டாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அழுத ஷிவா, தன் மனைவியை கொன்றவனை பழி வாங்க ஆத்திரத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றான்.


மறுநாள் காலை 8 மணிக்கு.. 
        
தன் மகள் ஸ்ருதிக்கு ஜடை பின்னிக்கொண்டிருந்தாள் ரேவதி.
"அம்மா... இன்னைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டலன்னா, வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு சொல்லிட்டாங்கம்மா..".

"இன்னைக்கு தந்துடுறேன் டா.. நேத்து நைட்டு சுரேஷ்கிட்ட உனக்கு சாப்பாடு குடுத்து விட சொன்னேனே.. ஒழுங்கா சாப்டியா பாப்பா?.."

"ம்ம்ம்.. சாப்டேன்மா.. இன்னைக்காச்சும் சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா. நீ ஊட்டிவிட்டாதான் நான் சாப்டுவேன்.."

"இன்னைக்கு நைட்டும் அம்மாக்கு வேலை இருக்குது பாப்பா.. நாளைக்கு சாப்பாடு ஊட்டிவிட்றேன். என் சமத்துப் பாப்பால்ல நீ " 

"போம்மா.. நீ தினமும் என்னை ஏமாத்துற.. " தன் மகள் கொஞ்சிக்கேட்டது ரேவதிக்கு நெஞ்சில் அவள் உதைத்தது போல இருந்தது.மறைந்த தன் கணவனின்  புகைப்படம் ஒட்டிய பர்ஸிலிருந்து முந்தைய நாள் தன் மூன்று படப்பிடிப்பிலிருந்தும் கிடைத்த 5000ரூபாயை தன் மகளுக்கு கொடுத்தாள் துணை நடிகை ரேவதி. 

Tuesday 21 October 2014

மண்ணோடு மண்புழுவின் டூயட்.

உமக்குள்ள நான் இருப்பேன்.
உம்ம மடியில நான் கெடப்பேன்.
மத்தவுக மிதிக்கத்தான் நீ பொறந்த ஆனாலும்
மரஞ்செடி, வயக்காட்டு வேரெல்லாம் உம்ம நம்ப
மனுசப்பய வயிறெல்லாம் பட்டினிதான் நீ வெம்ப.
மழக்காலம் வந்துடுச்சு,விவசாயி மனங்குளிர
மச்சானே உம்மோட நானிருக்கேன் நீ செழிக்க. 
                              
  - மண்ணோடு மண்புழுவின் டூயட்.

Monday 28 July 2014

தர்க்கதிற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டது

இன்றோடு ஒரு வாரம் முடிந்தது.இன்னும் 3 நாட்கள்தான். 

"ஏதோ யாருமில்லாத் பாழடைந்த பங்களா இருந்ததால தங்குறதுக்கு இடம் தேட தேவையில்லாம போச்சு.ஆனா பார்ரா.. இந்த சாமியாரை நினைச்சாதாண்டா பயமாஇருக்கு" முதலாமவன் சொன்னான். 


"டேய் நாம மூணு பேரு இருக்கோம்டா.. அவரு ஒரு ஆளு நம்மள என்ன செஞ்சுடப்போறாரு?" இரண்டாமவமன் அவனை தைரியப்படுத்தினான்.


 "டேய் மாங்கொட்டைகளா.. அந்த சாமியார் வந்தா.. மந்திர ஓத ஆரம்பிச்சுடுவான்.. பேசாம தூங்குங்கடா வெண்ணைகளா... "  மூன்றாமவன் கத்தினான். 

"டேய்.. எனக்கென்ன சந்தேகம்னா.. எப்படிடா இந்த சாமியார் கூட இத்தன வருஷமா அந்த லூசு கருப்புசட்டக்காரன்  மட்டும் குடியிருக்கான்.. அதுவும் இந்த ஒட்டடை புடிச்ச பங்களாவில.." 

"டேய் அவன்தான் மனநிலை சரியில்லாதவனாச்சே.. அதனால அவன் அந்த சாமியார் கத்துறத காதுல வாங்கிக்காம இங்க ஒரு ஓரமா இருப்பான் போல.." 

இவர்கள் பேச்சுக்கு நடுவில் மூன்றாமவன் மறுபடியும் குறுக்கிட்டு "டேய்.. இங்க ஒரு ராட்சத சிலந்திப்பூச்சி இருக்குதுடா.. அதுதான் இந்த பங்களாவ பாழடைய வெச்சுது..அது ஒரு 8 அடி உயரம் இருக்கும்டா.. ஆனா பசிக்கும்போது மட்டும்தான் அப்படி பெரிய உருவமா இருக்கும். மத்த நேரத்துல ஒரு கொசுவாவோ, ஈயாவோ ஏன் மனுஷனாக்கூட இருக்கலாம்.அந்த சாமியார் சொல்ற மந்திரத்துல இருக்குற வைப்ரேஷன்ல அந்த சிலந்திப்பூச்சியோட பவர் குறைஞ்சு, இந்த ஒட்டடையெல்லாம் மறைஞ்சு போகுது.தொணதொணன்னு பேசாம போய் தூங்குங்கடா.." சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.



முதலாமவனும் இரண்டாமவனும் முணுமுணுத்தனர்
"டேய் ஒருவேளை இவன்தான் அந்த சிலந்திப்பூச்சியா இருபானோ..?"
"இருக்கலாம்டா.. நைட்டுலாம் வேற சரியாத்தூங்க மாட்டேங்குறான்.."


"டேய் நொண்ணைங்களா.. நேத்து உங்க குறட்டை சத்தம் இம்சை தாங்க முடியாமத்தான்டா அந்த சாமியார்கிட்ட இந்த கதையெல்லாம் கேட்டுட்டு வந்தேன்..இன்னைக்காச்சும் தூங்க விடுங்கடா.." மூன்றாமவன் எரிச்சலுடன் முகத்தைச் சுழித்துகொண்டு சொன்னான்.


மற்ற இருவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தூங்குவதுபோல நடித்தனர். பங்களாவின் மாடியிலிருந்து சாமியாரின்குரல் ஒலிக்க ஆரம்பித்தது
"ஓம்ம்ம்ம்.. க்க்க்ரீம்ம்ம்.." .. முதல் இருவரும் மாடிக்கு சென்றனர். படியெல்லாம் காய்ந்த இலைச்சருகுகளும் ,ஒட்டடையுமாக இருந்தது.. மாடியின் மேல்முகப்பின்  (balcony) வழியாக நிலா ஒளிவீசிக்கொண்டிருக்க , மேல்முகப்பின் எதிர் அறையில் சாமியார் கையில் கற்பூரத்தட்டையும்  மணியும் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். 




இரண்டாமவன்  மேல்மாடத்தின் அருகில் நின்றுகொண்டு கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான். அப்போது அந்த ராட்சத சிலந்தி தாவிவந்து அவனை பின்புறமாக கவ்விக்கொண்டு கீழே இருந்த புதரில் அவனை அழுத்தியது. அவன் சிலந்தியின் வாயிலிருந்து வந்த நூலாம்படையில் மூழ்க ஆரம்பித்தான்.சிறிது நேரத்தில் அவனும், சிலந்தியும்  அந்த அடர்ந்த புதருக்குள் காணாமல் போனார்கள்.இதை நேரில் பார்த்த முதலாமவன் அதிர்ச்சியில் அலறினான். சாமியாரைக் காணவில்லை. கீழ் அறையில் படுத்திருந்த மூன்றாமவனையும் காணவில்லை. கத்திக்கொண்டே ஓடி பங்களாவைவிட்டு வெளியே வந்தபோது மூன்றாமவன் வெளியிலிருந்து பங்களாவின் வாசலில் நுழைந்தான்.


நூறு வருடங்கள் கடந்தன.

பங்களாவில் மூன்றாமவனும், கருப்புச்சட்டைக்காரனும் ,சாமியாரும் இன்னும் அப்படியே இருந்தனர். பத்துபேர் கொண்ட குழு நவநாகரீக உடையணிந்து அங்கு தங்க வந்திருந்தனர். மூன்றாமவன் அவர்களிடம் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதையைக்கூறினான். அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. சாமியார் அவனருகில் நின்றுகொண்டிருந்தார்.கருப்புசட்டைக்காரன் அந்த அறையின் வாசலில் நின்றிருந்தான். 

"இதோ இங்க தான் நின்னு சோம்பல் முறிச்சான்.. இந்த ஜன்னல் வழியாதான் அந்.." 

"தடால்..." 

கருப்புசட்டைகாரன் ராட்ஷத சிலந்தியாக மாறி மூன்றாமவனைத் தூக்கிச்சென்று அதே புதரில் வைத்தான். அவனை தன் வாயிலிருந்து வந்த நூலாம்படையில் மூழ்கச்செய்தது. பத்துபேரும் அந்த புதருக்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கே இதுபோன்ற பல பிணக்குவியல்கள் நூலாம்படையில் மூழ்கிக்கிடந்தன.

பதறிப்போன அந்த பத்துபேரும் மறுநாள் ஒரு திட்டமிட்டனர். அந்த பத்துபேரில் ஒருவனான என்னை அதே இடத்தில் நின்று சோம்பல் முறிக்கச்சொன்னார்கள்.நானும் செய்தேன்.அதே கருப்புச்சட்டைக்காரன் சிலந்தியாக மாறி என்னை மேல்மாடத்திலிருந்து கவ்விக்கொண்டு புதரில் தள்ளியது.கொழ கொழவென நூலாம்படையை என்மேல் கக்கியது அந்த சிலந்தி. நூலாம்படை என்னை சூழ்ந்துகொண்டது. மற்ற ஒன்பது பேரும் அந்த சிலந்தி வழக்கமாக தன் இரையைச் சேகரிக்கும் புதரில் நெருப்பு குவியலை உருவாக்கிவைத்திருந்தனர். சிலந்தி என்னையும்சேர்த்து நெருப்புக்குவியலில் தள்ளியது. நூலாம்படையில் மூழ்கியிருந்ததால் என்னை நெருப்பு அவ்வளவு எளிதாக தாக்க முடியவில்லை. இருப்பினும் சிலந்தி என்னை இறுக்க பற்றியிருந்தது.


மற்ற ஒன்பதுபேரும் நெருப்பு உடை அணிந்துகொண்டு அந்த சிலந்தியிடமிருந்து என்னை மீட்க நெருப்புக்குவியலுக்குள் விழுந்தனர். அந்த நெருப்பு உடை நெருப்பில் குதிப்பதற்காக ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. வெளிப்பக்கம் நெருப்பாலும் மனிதனின் தோலை தாக்காமல் இருப்பதற்காக உட்பக்கம் நீராலும் ஆன உடை அது. அதை அணிந்தவர்கள் ஒவ்வொருவரும் மனித உருவிலிருக்கும் நெருப்பாக காட்சியளித்தனர். 




சிலந்தியின் கைகளுக்குள் இருக்கும் நான் இப்போது மெல்ல மெல்ல நெருப்பை உணர்கிறேன். சற்று நேரத்திலேயே எனக்கு வியர்வை வழிய ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரத்திலேயெ நான் நெருப்பில் வெந்துவிடப் போகிறேன். இவர்கள் என்னைக்காப்பாற்ற முயலாமல் சிலந்தியை தாக்குவதிலேயே  குறியாக இருந்தனர். நெருப்பு உடை அணிந்தவர்களும் அந்த நெருப்புக்குவியலில் நிற்பதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருந்தது. என்னைச் சுற்றியிருந்த நூலாம்படை முற்றிலுமாக உருகிவிட்டது. நானும் இப்போது உருக ஆரம்பிக்கிறேன். தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைபோல குறுகி உட்கார்ந்திருக்கிறேன். தாடைக்கும் கழுத்திற்கும் இடையில் சுருக்கிவத்திருக்கும் என் பின்கைகள்  ஏதோ திரவத்தை உண்ர்கின்றன. "அவ்ளோ தான்.. நான் உருக ஆரம்பிச்சுட்ட்டேன்..". முகமெல்லாம் எறிய ஆரம்பித்ததும் தான் தெரிந்தது ஒன்பது மணி வெயில் முகத்தில் அடித்ததால் வந்த கனவு என்று.எழுந்து சென்று ஜன்னலைச் சாத்திவிட்டு
மின்விசிறியை இயக்கச் செய்து மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

Wednesday 23 July 2014

அடச்சே

           அடச்சே

அன்று மலர்ந்த அரளிப்பூ
அவன் கண்ணில் படவில்லை.
அழகிய குழந்தை முத்தம் கேட்டது
அவன்  செவிகளில்  விழவில்லை
அதிகாலை தென்றலை
அவன் உடல் உணரவில்லை
அவள் போட்ட கோலமும்
அழகாய் தெரியவில்லை -எதிரில்
அவள் அன்னநடையிட்டு
புன்னகை  செய்ததுகூட தெரியவில்லை
வெறிநாயொன்று துரத்தி அவன்
வேகமாய் ஓடுகையில்...

          
            -சுபாஷினி 

Wednesday 9 July 2014

புகைந்த புன்னகை




தூக்கம் வரல..நெஞ்சு வேற வலிக்குது. வழக்கமான விஷயம் தான். ஆனா வழக்கத்த விட இன்னைக்கு அதிகமா இருக்கு. வழக்கமான காரணம் workpressure அப்றம் டென்ஷன். ஒரு சிகரெட் இல்ல ரெண்டு சிகரெட் பிடிச்சா ரிலாக்ஸாத்தான் இருக்கும்.ஆனா இன்னைக்கு வீட்டுல பிரச்சனை.கல்யாணம் ஆகி 5 வருஷம் கழிச்சு பொறந்த பொண்ணு அகல்யா. என் உயிரே அவதான். அகல்யா ரகுநாதன். இதோ என் பக்கத்துல படுத்துருக்காளே.. இவதான் என் மனைவி. ஜானகி ரகுநாதன். ஆஃபீஸ் ல ப்ராஜெக்ட்ல சின்ன ப்ராப்ளம். டென்ஷன்ல அகல்யாவை அடிச்சுட்டேன். சே தப்பு பண்ணிட்டேன். இப்போ நெனைச்சாலும் அழுகை வருது. டேய்.. கண்ணீர் வருது பாரு..கன்ட்ரோல்.. ரிலாக்ஸ்..  டீப் ப்ரீத் எடுத்துக்கோ டா.. 42 வயசாகுற எனக்கே இவ்ளோ அழுகை வருதுன்னா அந்த ரூம்ல படுத்துருக்குற அகல்யா குட்டிக்கு எப்டி இருக்கும்.. லட்ச்க்கணக்குல சம்பாதிச்சு என்ன ப்ரயோஜனம். என் பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருக்க முடியலயே.. சரி விடு. ஃபீல் பண்ணாத.அகி குட்டியை அவ ரூம்ல போய் பாக்கலாம். அவ கிட்ட படுத்துக்கலாம். "ரகு.. எங்க போறீங்க.." ஜானுவும் இன்னும் தூங்கல. "அகி ரூம்க்கு..பாப்பா தூங்கிட்டாளா..?" பதில்லில்லாமல் மூக்கு உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது. ஜானுவும் அழறா.. என் குடும்பத்த என்னால சந்தோஷமா வெச்சுக்க முடியலயே. எல்லாம் இந்த பாழாய்போன சிகரெட் பழக்கத்தால தான.. என் பொண்ண எப்படி சமாதானப்படுத்த போறேன்னு தெரியலயே.
அகி ரூம் கதவுல  "I love my daddy.. but he loves his cigarettes"  அப்படின்னு எழுதிருக்கா. எவ்ளோ பாசம் என் பொண்ணுக்கு. கண்ணீர்
தான் வருது. ஐயோ.. நெஞ்சு பயங்கரமா வலிக்குது. tablet வேற ரூம்ல இருக்குது.. மொதல்ல அத போட்டுட்டு வரலாம்.cool.. cool... இனி இந்த பாழாபோன சிகரெட்ட நான் தொட மாட்டேன்.கண்ண கட்டிகிட்டு வருது.

இரண்டு நிமிடங்கள் கழித்து... 


"அகி குட்டி.. டாடி மேல கோபமாடா.. சாரிம்மா..." திரும்பிக்கூட பார்க்காம டெடி பியரைக் கட்டிக்கிட்டு குப்புறப் படுத்துருக்கா."காலையில அப்பா டென்ஷனா இருக்கும்போது நீ சிகரெட் பாக்கெட்டை ஒழிச்சு வெச்சுட்ட.. அதான்டா கோபத்துல அடிச்சுட்டேன். இனி அப்பா சிகரெட் அடிக்க மாட்டேன். நீ அத திருப்பி தர வேண்டாம்.. அப்பாவ பாருடா.."  பதில் வரவில்லை. "ரகு..
ங்க என்ன பண்றீங்க??" ஜானு என்னை தேடி வர்றா."பட்டு குட்டி.. " என என் மகளை தொட்டு தூக்க போனபோது என்னால் அவளைத் தொட முடியவில்லை. அறையின் வாசலில் ஜானுவின் அலறல் சத்தம் கேட்டது.. "ரகு.. ரகு.. என்னாச்சு.. என்னை பாருங்க.." என்று. வெளியே வந்து எட்டிப்பார்க்கையில் என் பிணத்தின் முன்பு ஜானு பதறிப்போய் உட்கார்ந்திருந்தாள்

Friday 4 July 2014

வாழ்க்கை ஒரு வட்டம்

 வாழ்க்கை ஒரு வட்டம்

"உருவத்தில் பெரியவளாயிருந்தும்
உண்மையானவளாயிருந்தும், என்போல் 
உள்ளே வரமுடிந்ததாடீ உன்னால்?
வந்தவர்கள் செருப்புக்குத் துணையாய்
வாசலிலேயே தொங்கி நில்லடி"- என
பந்தலில் இருந்த வாழைமரப் பூவை
பரிகாசம் செய்தன
கல்யாண மேடையின் காகிதப்பூக்கள்.
கண்ணைப்பறிப்பது போல்
கவர்ச்சியாய் இருக்கிறாய் என்றவன்
கல்யாணம் முடிந்ததும்
கழற்றிவிட்டான்..
கசங்கிப்போன காகிதப்பூக்கள்
கர்வத்தைத் தொலைத்து
கதறின குப்பைத்தொட்டியில்..
வாழைப்பூ பொறியல் விருந்துசாப்பாட்டிற்காக 

வரதட்சணையாய் வந்த சட்டியில்..