தமிழ் கடவுளுக்கு..

மன்மத ஆண்டு 
சித்திரை 2 (15-4-2015)

          
கதிரவனே தினம்நீ
உதித்ததுமே என்அருகில்   
கதிர்காமன் எனும்என் 
பதியானவனின் பொன்னிரு 
தாள் களை நான்  பணியும் திரு
நாள் எதுவோ? தூதுசென்று
வேல்முருகன் என் 
ஆழ் மனதில் ஒரு 
ஆல் வேரென்று  கூறிட
ஆள்  வேறில்லை. ஆதவனே உன் 
நீள் கரம் கொண்டு
நீ கூறுவாயோ குமரனிடம்? 









( சந்திர கிரகணம்)9-10-2014
  

 குமரன் இல்லாத தினம்
குறத்தி இவளுக்கு ரணம்-அவனிடம்
கூறடி என அழைத்த கணம்
குளிர் நிலவே இன்று உணக்கும் கிரகணம்.
                 -
-சுபாஷினி












23.9.2014

அமாவாசையில் ஆறுமுகனைத்தேடி
======================================

விடிகாலை கனவொன்றில் நீர் என்
கொடிபோன்ற இடை தாங்க உம்
மடிமீது நான் உறங்க ஏனோ
நொடியொன்றில் எனை புறந்தள்ளி
வடிவேலன் உன் குறவள்ளி இவள்
அடிமனதில் அடியொன்று தந்தாய்.
செந்நிற ஈர விழி துடைக்க
உன்னிரு கரங்கள் போதும்,
பன்னிரு கட்டங்கள் எதற்கென
பொன்னிற வேல் கொண்டவனிடம் கூற
வெண்ணிலவில்லை அமாவசையில்


-  
-சுபாஷினி







ஜய-ஆவணி மாதம் 
23.8.2014

அமாவாசையில் ஆறுமுகனைத்தேடி
======================================


கார்மேகங்கள் சூழ்ந்த பொதிகையில்
நீர் எனைக் காண மயில்மீது வந்தீர்.
கூர்வேல் அதுதான் விழியோ அதனை
நேர்பாராது மண்பார்த்தேன்.
ஓர்முகம் கண்டு நான் மயங்க
சீர்கொண்ட ஆறுமுகங்களை
நேர்நின்று நான் காண்பது எங்ஙனம்?
நறுமுகை நான் நாணி வளையணிந்த
சிறுகரம்கொண்டு என் முகம் மறைத்தேன்.
வெறுமையில் வாழும் இவளிடம்
குறுநகை காட்டி ஒருநாளில் சென்றதேனோ?
திருமுகம்தானில்லை அவர் போன்ற
ஒருநிலவைக் காண வான்நோக்கினேன். 
இருள் மட்டும்தெரிந்தது அமாவாசையில்.

வெறும் சொற்கள் தானெனினும் அவரிடம்          
குறுஞ்செய்தியொன்றை வாங்கி வர                        

கரு வானில் நிலவில்லை இன்று.                                                   -சுபாஷினி

















ஜய - ஆடி மாதம்
26.7.2014

 

No comments:

Post a Comment