Thursday 8 August 2013

மழை

ஆடி காரின் பின்னிருக்கையில்
ஆண்ட்ராய்டு கைபேசியில்
ஆங்கிரி பேர்ட் விளையாடுபவனை
"கண் திறந்து என்னை பார்" என
கத்திக்கொண்டே வந்து ஜன்னல்
கண்ணாடியில் முட்டி கரைந்தது
கார்கால மழைதுளி

மனைவிக்கு மலேரியா வரவைத்து
மாதக்கடைசியில்
மார்வாடிகடையில் …நிற்கவைத்தது
கொசுவுக்கு குடும்பவிருத்தி
கொடுத்த மழை

இரண்டு துளிகளில் ஆரம்பித்து
இருபது நொடிகளில்
இரண்டாவது பாத்திரத்தைக் கேட்டது
ஓட்(டை)டு வீட்டில் மழை

"மரம் வ"
மழை பெ"
மற்ற எழுத்துக்களில்
மை கசிந்து அழிந்திருந்தது.
மழை பெய்தால் ஒதுங்க
மரம் கூட இல்லாத
நடைபாதை குடும்பத்தில்
பெய்த பருவ மழை

இவர்களுக்கெல்லாம் கெட்டவனாய்
இருந்தபோதிலும்
இறைவனே நீதான் என்ற
உழவனைத் தேடி வந்தபோது
"பட்ட மண்ணை நம்பி
பட்டது போதுமடா..
படிச்சுட்டு போடா
பட்டணத்துக்கு" என்றான்
படிக்கும் தன் மகனிடம்

மனிதனுக்கும் பிடிக்கவில்லை.
இலைத்துளிவழி தன்னை அனுப்பிய
மரத்தையும் காணவில்லை

ஏழையும் எளியவனும்
ஏசி காரில் செல்பவனும்
ஏசினாலும் பேசினாலும் கூட
இத்தனை இன்னல்களையும் தாங்கி
இடி எனும் குரலால் முனங்கி
அணைத்துக் கொள்ளும் அன்னை - மழை

No comments:

Post a Comment