Wednesday 10 April 2013

ஐம்பது ரூபாய்


 



உச்சி வெயில் கொளுத்தும் நேரத்தில் contractor கந்தபெருமாள்  கையை உயர்த்திக் காட்டி ராமசாமியை "யோவ்..அந்த சிமெண்ட் மூட்டையை அங்க போட்டுட்ட்டு வாயா" என அழைத்தார். தலையில் கட்டியிருந்த துண்டை கழற்றி கையின் இடுக்கில் வைத்துக் கொண்டு ராமசாமி "சொல்லுங்க ஐயா" என பவ்யமாக கேட்டார்."இந்த இந்த அம்பது ரூபாய வெச்சுகிட்டு ஆட்டோவ புடிச்சு வீட்டுக்கு போய்ட்டு உடம்பு சரியானதுக்கப்றம் வா..மஞ்சள் காமாலையை வெச்சுகிட்டு எவனாச்சும் கொத்து வேலய பாக்க வருவானாய? போ.. போய் வைத்தியர் கிட்ட நன் சொன்னேன்னு சொல்லி மருந்து வாங்கி சாப்டு. அவருக்கு காசு நான் குடுத்துட்றேன்" என ராமசாமியை அக்கறையுடன் அனுப்பி வைத்தார் கந்தபெருமாள். தள்ளாடி தள்ளாடி நடந்து போய் கொண்டிருந்த ராமசாமி வரும் வழியில் வாட்ட சாட்டமான ஒரு வாலிபன் விழுந்து கிடப்பதை பார்த்து அவசர அவசரமாக அவனை எழுப்பினார். அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவன் கந்தபெருமாளின் மகன் என்பது. "அய்யயோ.. அய்யாவோட புள்ளை .. இப்படி குடிச்சுட்டு உடம்ப கெடுத்துக்குறானே.. " குடி போதையிலிருந்த அவனால் எழுந்திருக்க முடியாமலிருந்தது.20 செங்கலின் எடைக்கு  நிகரான அவன் கையைத் தூக்கியபோது பாட்டிலில் இருந்த மிச்ச சாராயம் ராமசாமியின் மீது கொட்டியது. அதயும் பொருட்படுத்தாமல்  அவனை இழுத்துக் கொண்டே சென்று பக்கத்திலிருந்த தெருக்குழாயில் உட்கார வைத்து அவனை சிறிது தெளிய வைத்தார். அந்த பக்கமாக போன ஆட்டோவில் அவனை ஏற்றி விட்டு கையிலிருந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்து அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தலை சுற்றலுடன் தள்ளாடிக்கொண்டே வீட்டிற்கு நடையைக்கட்டினார். அடுத்த தெருவில் தலையும் உடலும் பாரமாக தெரிந்தன. கண்கள் இருண்டு தலைசுற்றி மயங்கி கோவில் வாசலில் சுருண்டு விழுந்தார். கோவில் வாசலில் இருந்து வெளியே வந்த  கந்தபெருமாளின் மனைவி "ச்சீ ..  குடிகார பய  பட்ட  பகல்ல  குடிச்சுட்டு  கோவில்  முன்னாடி  விழுந்து  கெடக்குறான்  பாரு " என தன்   தலையில் அடித்தவாறே   அவனை  திட்டிக்கொண்டு  வாசலில்  இருந்த  பிச்சைக்காரனுக்கு  ஐம்பது  ரூபாய் பிச்சை  போட்டுவிட்டு  'மகராசி உன் புள்ளை குட்டியெல்லாம் சந்தோஷமா வாழணும் மா' என்ற அவன் வாய் வாழ்த்தை வாங்கிக் கொண்டு ப்ரசாதத்தை  தன்  மகனுக்கு எடுத்துச்  சென்றாள்.

2 comments: