Monday 28 July 2014

தர்க்கதிற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டது

இன்றோடு ஒரு வாரம் முடிந்தது.இன்னும் 3 நாட்கள்தான். 

"ஏதோ யாருமில்லாத் பாழடைந்த பங்களா இருந்ததால தங்குறதுக்கு இடம் தேட தேவையில்லாம போச்சு.ஆனா பார்ரா.. இந்த சாமியாரை நினைச்சாதாண்டா பயமாஇருக்கு" முதலாமவன் சொன்னான். 


"டேய் நாம மூணு பேரு இருக்கோம்டா.. அவரு ஒரு ஆளு நம்மள என்ன செஞ்சுடப்போறாரு?" இரண்டாமவமன் அவனை தைரியப்படுத்தினான்.


 "டேய் மாங்கொட்டைகளா.. அந்த சாமியார் வந்தா.. மந்திர ஓத ஆரம்பிச்சுடுவான்.. பேசாம தூங்குங்கடா வெண்ணைகளா... "  மூன்றாமவன் கத்தினான். 

"டேய்.. எனக்கென்ன சந்தேகம்னா.. எப்படிடா இந்த சாமியார் கூட இத்தன வருஷமா அந்த லூசு கருப்புசட்டக்காரன்  மட்டும் குடியிருக்கான்.. அதுவும் இந்த ஒட்டடை புடிச்ச பங்களாவில.." 

"டேய் அவன்தான் மனநிலை சரியில்லாதவனாச்சே.. அதனால அவன் அந்த சாமியார் கத்துறத காதுல வாங்கிக்காம இங்க ஒரு ஓரமா இருப்பான் போல.." 

இவர்கள் பேச்சுக்கு நடுவில் மூன்றாமவன் மறுபடியும் குறுக்கிட்டு "டேய்.. இங்க ஒரு ராட்சத சிலந்திப்பூச்சி இருக்குதுடா.. அதுதான் இந்த பங்களாவ பாழடைய வெச்சுது..அது ஒரு 8 அடி உயரம் இருக்கும்டா.. ஆனா பசிக்கும்போது மட்டும்தான் அப்படி பெரிய உருவமா இருக்கும். மத்த நேரத்துல ஒரு கொசுவாவோ, ஈயாவோ ஏன் மனுஷனாக்கூட இருக்கலாம்.அந்த சாமியார் சொல்ற மந்திரத்துல இருக்குற வைப்ரேஷன்ல அந்த சிலந்திப்பூச்சியோட பவர் குறைஞ்சு, இந்த ஒட்டடையெல்லாம் மறைஞ்சு போகுது.தொணதொணன்னு பேசாம போய் தூங்குங்கடா.." சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.



முதலாமவனும் இரண்டாமவனும் முணுமுணுத்தனர்
"டேய் ஒருவேளை இவன்தான் அந்த சிலந்திப்பூச்சியா இருபானோ..?"
"இருக்கலாம்டா.. நைட்டுலாம் வேற சரியாத்தூங்க மாட்டேங்குறான்.."


"டேய் நொண்ணைங்களா.. நேத்து உங்க குறட்டை சத்தம் இம்சை தாங்க முடியாமத்தான்டா அந்த சாமியார்கிட்ட இந்த கதையெல்லாம் கேட்டுட்டு வந்தேன்..இன்னைக்காச்சும் தூங்க விடுங்கடா.." மூன்றாமவன் எரிச்சலுடன் முகத்தைச் சுழித்துகொண்டு சொன்னான்.


மற்ற இருவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தூங்குவதுபோல நடித்தனர். பங்களாவின் மாடியிலிருந்து சாமியாரின்குரல் ஒலிக்க ஆரம்பித்தது
"ஓம்ம்ம்ம்.. க்க்க்ரீம்ம்ம்.." .. முதல் இருவரும் மாடிக்கு சென்றனர். படியெல்லாம் காய்ந்த இலைச்சருகுகளும் ,ஒட்டடையுமாக இருந்தது.. மாடியின் மேல்முகப்பின்  (balcony) வழியாக நிலா ஒளிவீசிக்கொண்டிருக்க , மேல்முகப்பின் எதிர் அறையில் சாமியார் கையில் கற்பூரத்தட்டையும்  மணியும் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். 




இரண்டாமவன்  மேல்மாடத்தின் அருகில் நின்றுகொண்டு கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான். அப்போது அந்த ராட்சத சிலந்தி தாவிவந்து அவனை பின்புறமாக கவ்விக்கொண்டு கீழே இருந்த புதரில் அவனை அழுத்தியது. அவன் சிலந்தியின் வாயிலிருந்து வந்த நூலாம்படையில் மூழ்க ஆரம்பித்தான்.சிறிது நேரத்தில் அவனும், சிலந்தியும்  அந்த அடர்ந்த புதருக்குள் காணாமல் போனார்கள்.இதை நேரில் பார்த்த முதலாமவன் அதிர்ச்சியில் அலறினான். சாமியாரைக் காணவில்லை. கீழ் அறையில் படுத்திருந்த மூன்றாமவனையும் காணவில்லை. கத்திக்கொண்டே ஓடி பங்களாவைவிட்டு வெளியே வந்தபோது மூன்றாமவன் வெளியிலிருந்து பங்களாவின் வாசலில் நுழைந்தான்.


நூறு வருடங்கள் கடந்தன.

பங்களாவில் மூன்றாமவனும், கருப்புச்சட்டைக்காரனும் ,சாமியாரும் இன்னும் அப்படியே இருந்தனர். பத்துபேர் கொண்ட குழு நவநாகரீக உடையணிந்து அங்கு தங்க வந்திருந்தனர். மூன்றாமவன் அவர்களிடம் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதையைக்கூறினான். அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. சாமியார் அவனருகில் நின்றுகொண்டிருந்தார்.கருப்புசட்டைக்காரன் அந்த அறையின் வாசலில் நின்றிருந்தான். 

"இதோ இங்க தான் நின்னு சோம்பல் முறிச்சான்.. இந்த ஜன்னல் வழியாதான் அந்.." 

"தடால்..." 

கருப்புசட்டைகாரன் ராட்ஷத சிலந்தியாக மாறி மூன்றாமவனைத் தூக்கிச்சென்று அதே புதரில் வைத்தான். அவனை தன் வாயிலிருந்து வந்த நூலாம்படையில் மூழ்கச்செய்தது. பத்துபேரும் அந்த புதருக்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கே இதுபோன்ற பல பிணக்குவியல்கள் நூலாம்படையில் மூழ்கிக்கிடந்தன.

பதறிப்போன அந்த பத்துபேரும் மறுநாள் ஒரு திட்டமிட்டனர். அந்த பத்துபேரில் ஒருவனான என்னை அதே இடத்தில் நின்று சோம்பல் முறிக்கச்சொன்னார்கள்.நானும் செய்தேன்.அதே கருப்புச்சட்டைக்காரன் சிலந்தியாக மாறி என்னை மேல்மாடத்திலிருந்து கவ்விக்கொண்டு புதரில் தள்ளியது.கொழ கொழவென நூலாம்படையை என்மேல் கக்கியது அந்த சிலந்தி. நூலாம்படை என்னை சூழ்ந்துகொண்டது. மற்ற ஒன்பது பேரும் அந்த சிலந்தி வழக்கமாக தன் இரையைச் சேகரிக்கும் புதரில் நெருப்பு குவியலை உருவாக்கிவைத்திருந்தனர். சிலந்தி என்னையும்சேர்த்து நெருப்புக்குவியலில் தள்ளியது. நூலாம்படையில் மூழ்கியிருந்ததால் என்னை நெருப்பு அவ்வளவு எளிதாக தாக்க முடியவில்லை. இருப்பினும் சிலந்தி என்னை இறுக்க பற்றியிருந்தது.


மற்ற ஒன்பதுபேரும் நெருப்பு உடை அணிந்துகொண்டு அந்த சிலந்தியிடமிருந்து என்னை மீட்க நெருப்புக்குவியலுக்குள் விழுந்தனர். அந்த நெருப்பு உடை நெருப்பில் குதிப்பதற்காக ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. வெளிப்பக்கம் நெருப்பாலும் மனிதனின் தோலை தாக்காமல் இருப்பதற்காக உட்பக்கம் நீராலும் ஆன உடை அது. அதை அணிந்தவர்கள் ஒவ்வொருவரும் மனித உருவிலிருக்கும் நெருப்பாக காட்சியளித்தனர். 




சிலந்தியின் கைகளுக்குள் இருக்கும் நான் இப்போது மெல்ல மெல்ல நெருப்பை உணர்கிறேன். சற்று நேரத்திலேயே எனக்கு வியர்வை வழிய ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரத்திலேயெ நான் நெருப்பில் வெந்துவிடப் போகிறேன். இவர்கள் என்னைக்காப்பாற்ற முயலாமல் சிலந்தியை தாக்குவதிலேயே  குறியாக இருந்தனர். நெருப்பு உடை அணிந்தவர்களும் அந்த நெருப்புக்குவியலில் நிற்பதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருந்தது. என்னைச் சுற்றியிருந்த நூலாம்படை முற்றிலுமாக உருகிவிட்டது. நானும் இப்போது உருக ஆரம்பிக்கிறேன். தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைபோல குறுகி உட்கார்ந்திருக்கிறேன். தாடைக்கும் கழுத்திற்கும் இடையில் சுருக்கிவத்திருக்கும் என் பின்கைகள்  ஏதோ திரவத்தை உண்ர்கின்றன. "அவ்ளோ தான்.. நான் உருக ஆரம்பிச்சுட்ட்டேன்..". முகமெல்லாம் எறிய ஆரம்பித்ததும் தான் தெரிந்தது ஒன்பது மணி வெயில் முகத்தில் அடித்ததால் வந்த கனவு என்று.எழுந்து சென்று ஜன்னலைச் சாத்திவிட்டு
மின்விசிறியை இயக்கச் செய்து மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

No comments:

Post a Comment