Monday, 5 May 2014

தொடரும்






 தொடரும்


கும்மிருட்டு குகையில்
குனிந்தவாறே சென்றான்.
கையிலிருந்த கத்தி
தவறி கீழே விழுந்தது.
தடவி தடவி தேடுகையில்
தடார் என சத்தம் கேட்டது.
தொலைவிலிருந்து குரல் வந்தது
'தொலைந்து போ..' என்று.
தொடரும் போட்டு முடிந்தது.
-கன்னித்தீவு கதை
கலர்கலராக இன்று


Monday, 17 March 2014

மாற்றம்

   மாற்றம்



இருள் சூழ்ந்த என் வீதியில்
இரவெல்லாம் பௌர்ணமி ஆனது.

சீரற்ற என் பாதை
தாரூற்றி மெருகேறியது.

நீரற்ற என் பானை
நிரம்பி வழிய வழிகிடைத்தது.

நாரிக் கிடந்த சாக்கடை கூட
வாரி இறைத்து தூய்மையானது.

சின்னங்கள் சுவரில் பொறித்து
வண்ணங்கள் கொடியில் பறந்து
வாக்குறுதிகள் காற்றில் பறக்கவைத்திடும் -
"தேர்தல்." 

Thursday, 6 March 2014

கடுப்பு

                கடுப்பு
கதாநாயகன் மலை உச்சியில் தொங்கும்போதும்,
மாமியார் மருமகள் சண்டை காட்சியிலும்,
மகளின் காதல் திருமணத்தைக் கண்டு
மாரடைப்பில் தந்தை துடிக்கும் காட்சியிலும்,
விக்கெட் விபரம் சொல்லும்
விளையாட்டு செய்தியின் போதும்
கரண்ட் கட் மூலம் வந்த கடுப்பு -இப்போது
"கடலுக்கு நடுவுல 2.5கிலோ மீட்டர்..
பாம்பன் பாலம்" விளம்பரத்தால் வருகிறது







Monday, 14 October 2013

மழை




கரியமில வாயுவால்
கறை படிந்த மேகத்தை
கருணையுடன் மழையாக
கசக்கி பிழிகிறது வானம்.
அலசி முடித்த பின்

அழுக்கு நீரை ஆகாயத்திலிருந்து 
அறுவறுப்புடன் அப்படியே
ஊற்றிவிட்டது உத்திரகாண்ட்டில்.
அடுத்த சலவைக்கு
அழைத்துவிடாமல்
அண்ணாந்து பார்த்து கொள்வோம்
ஆகாயத்தை..

Friday, 4 October 2013

சென்னை-வாசி

ஆசையாய் வளர்த்த
வெள்ளை ரோஜா செடியை
வேலி தாண்டி வந்து வேட்டையாடும்
வெள்ளாடு மந்தையின்
சேட்டைகள் இல்லை இங்கே

கொண்டைச் சேவல் துரத்தி
கோகிலா வீட்டிற்கு சென்ற கோழி
கொழம்பில் கொதிக்கும்
அநியாயத்தை அனுபவிப்பதில்லை இங்கே

பெயருக்குபின் பரம்பரைத்
தொழிலால் வந்த‌ பிரிவினையின்
பெயரை சேர்த்துக்கொள்வதில்லை இங்கே

வள்ளியம்மையுடன் போட்டியிட்டு
விடியுமுன் விழித்து
வாசலை அடைக்கும் விதமாக‌
வண்ணப்பொடியுடன் கோலமிட தேவையில்லை இங்கே

விளக்கு வைக்கும் நேரம் வந்ததும்
வீட்டு வாசல் தாண்டக்கூடாது என்ற
விதியில்லை இங்கே

கண்ணைப் பார்த்து நண்பனுடன்
கதையடித்தால் காதல் தான் என‌
கட்டுக்கதை பேசுவாரில்லை இங்கே

சமஞ்ச புள்ளைக்கு என்னடி
சத்தம் போட்டு சிரிப்பு?
சடை பின்னி பொட்டு வெச்சு
சமையல் கத்துக்கோடி...
என்று சத்தம்போடும்
அப்பத்தாவின் அதிகாரமில்லை இங்கே

பாஞ்சாலியும் பரஞ்சோதியும்
கிழக்கே போகும் ரயிலில் ஓடிப்போனாலும்
கார்வெச்சுருந்த சொப்பண சுந்தரியை
யார் வெச்சுருந்தாலும்
யாருக்கும் தெரியபோவதில்லை இங்கே ..

Thursday, 8 August 2013

மழை

ஆடி காரின் பின்னிருக்கையில்
ஆண்ட்ராய்டு கைபேசியில்
ஆங்கிரி பேர்ட் விளையாடுபவனை
"கண் திறந்து என்னை பார்" என
கத்திக்கொண்டே வந்து ஜன்னல்
கண்ணாடியில் முட்டி கரைந்தது
கார்கால மழைதுளி

மனைவிக்கு மலேரியா வரவைத்து
மாதக்கடைசியில்
மார்வாடிகடையில் …நிற்கவைத்தது
கொசுவுக்கு குடும்பவிருத்தி
கொடுத்த மழை

இரண்டு துளிகளில் ஆரம்பித்து
இருபது நொடிகளில்
இரண்டாவது பாத்திரத்தைக் கேட்டது
ஓட்(டை)டு வீட்டில் மழை

"மரம் வ"
மழை பெ"
மற்ற எழுத்துக்களில்
மை கசிந்து அழிந்திருந்தது.
மழை பெய்தால் ஒதுங்க
மரம் கூட இல்லாத
நடைபாதை குடும்பத்தில்
பெய்த பருவ மழை

இவர்களுக்கெல்லாம் கெட்டவனாய்
இருந்தபோதிலும்
இறைவனே நீதான் என்ற
உழவனைத் தேடி வந்தபோது
"பட்ட மண்ணை நம்பி
பட்டது போதுமடா..
படிச்சுட்டு போடா
பட்டணத்துக்கு" என்றான்
படிக்கும் தன் மகனிடம்

மனிதனுக்கும் பிடிக்கவில்லை.
இலைத்துளிவழி தன்னை அனுப்பிய
மரத்தையும் காணவில்லை

ஏழையும் எளியவனும்
ஏசி காரில் செல்பவனும்
ஏசினாலும் பேசினாலும் கூட
இத்தனை இன்னல்களையும் தாங்கி
இடி எனும் குரலால் முனங்கி
அணைத்துக் கொள்ளும் அன்னை - மழை