Friday, 10 April 2015

5000(0)




காலை 11 மணிக்கு..
   
துபாயிலிருந்து கணவன் அனுப்பிய 50000ஐ ATMஇல்இருந்து எடுத்துவிட்டு காரில் வந்து அமர்ந்தாள் ரேவதி. காரின் பின்னிருக்கையில் இருந்த மாணிக்கம் கத்தியை அவள் கழுத்தில் வைத்தான். "ஒழுங்கா கையிலிருக்குற பணத்தைக் குடுத்துடு". உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கையிலிருந்த பணத்தை அவன் கையில் கொடுத்துவிட்டாள். முதல்முறை செய்த திருட்டு முழு வெற்றி அடைந்த சந்தோஷத்தில், இனி திருடிதான் பிழைக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டான் அநாதை சிறுவன் மாணிக்கம்.

மதியம்  3 மணிக்கு.. 
      
  "உன் பொண்ணோட கால் அடிபட்டதுக்காக என் பையன் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணுமா? சான்ஸே இல்ல. நான் குடுக்குற டொனேஷன் மணிய வெச்சுதான்யா உன் பொண்ணு படிக்குற காலேஜே ஓடுது. என் பையன் கார் ஓட்டுற ஸ்பீடுக்கு உன் பொண்ணு உடம்புல உயிர் மிஞ்சுனதே பெருசுன்னு நெனைச்சு சந்தோஷப்பட்டுக்கோய்யா..." வைர வளையல் அணிந்திருந்த கையால் சொடுக்கு போட்டு தன் பி.ஏ வை அழைத்தாள் ரேவதி. "யோவ்..சிதம்பரம்.. இவன் மூஞ்சியில 50000ஐ விட்டு வீசுங்க. அஃப்ட்ரால் ஒரு கவர்மென்ட் ஸ்கூல் வாத்தியார்.இவன்கிட்ட கோடீஸ்வரியோட பையன் மன்னிப்பு கேக்கணுமா??" என கேட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள் ரேவதி. அன்று முதல் பணக்காரர்களை வெறுக்க ஆரம்பித்தார் அருணாசலம். தன் குழந்தைகளையும் பணக்காரர்களுடன் பழகாமல் பார்த்துகொண்டார். 


இரவு 9 மணிக்கு..
   
       "டாக்டர்.. நீங்க தான் டாக்டர் எப்படியாச்சும் என் மனைவியை காப்பாத்தணும் ப்ளீஸ்.." அவசர அவசரமாக விபத்தில் காயமடைந்த தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான் ஷிவா. "ஓகே.. கூல்ல்.. கூல்ல்.. நர்ஸ்.. இவங்கள ஆப்பரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போங்க.. ஷிவா.. நீங்க ரிஸப்ஷன்ல 50000 பணம் கட்டிடுங்க." என ஸ்டெத்தஸ்கோப்பை கையில் எடுத்துக் கொண்டு மதுவை உள்ளே அழைத்துச் சென்றாள் ரேவதி. அரை மணி நேரம் கழித்து. "ஸாரி ஷிவா.. நாங்க எவ்வளவோ போராடியும் உங்க மனைவியை காப்பாத்த முடியல.." என ஷிவாவிடம் கூறிவிட்டு ரேவதி சென்றுவிட்டாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அழுத ஷிவா, தன் மனைவியை கொன்றவனை பழி வாங்க ஆத்திரத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றான்.


மறுநாள் காலை 8 மணிக்கு.. 
        
தன் மகள் ஸ்ருதிக்கு ஜடை பின்னிக்கொண்டிருந்தாள் ரேவதி.
"அம்மா... இன்னைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டலன்னா, வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு சொல்லிட்டாங்கம்மா..".

"இன்னைக்கு தந்துடுறேன் டா.. நேத்து நைட்டு சுரேஷ்கிட்ட உனக்கு சாப்பாடு குடுத்து விட சொன்னேனே.. ஒழுங்கா சாப்டியா பாப்பா?.."

"ம்ம்ம்.. சாப்டேன்மா.. இன்னைக்காச்சும் சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா. நீ ஊட்டிவிட்டாதான் நான் சாப்டுவேன்.."

"இன்னைக்கு நைட்டும் அம்மாக்கு வேலை இருக்குது பாப்பா.. நாளைக்கு சாப்பாடு ஊட்டிவிட்றேன். என் சமத்துப் பாப்பால்ல நீ " 

"போம்மா.. நீ தினமும் என்னை ஏமாத்துற.. " தன் மகள் கொஞ்சிக்கேட்டது ரேவதிக்கு நெஞ்சில் அவள் உதைத்தது போல இருந்தது.மறைந்த தன் கணவனின்  புகைப்படம் ஒட்டிய பர்ஸிலிருந்து முந்தைய நாள் தன் மூன்று படப்பிடிப்பிலிருந்தும் கிடைத்த 5000ரூபாயை தன் மகளுக்கு கொடுத்தாள் துணை நடிகை ரேவதி. 

No comments:

Post a Comment